வல்வெட்டித்துறை தீருவில் தூபி பகுதியில் உள்ளுர் இளைஞர்கள் மேற்கொண்ட சிரமதானப்பணிகள் இலங்கை காவல்துறையால் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் இலங்கை காவல்துறையினர் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.
குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களதும் அதே போன்று கிட்டு உள்ளிட்ட போராளிகளதும் நினைவு தூபிகள் தீருவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.எனினும் அவை பின்னர் இலங்கைப்படைகளால் அழிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஒவ்வொரு மாவீரர் தினத்தன்றும் ஒன்று கூடும் மக்கள் அங்கு நினைவேந்தலை முன்னெடுத்துவருவது வழமையாகும்.
இந்நிலையில் இன்று மாவீரர் தினத்தை முன்னிட்டு சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இளைஞர்களை அப்பகுதி காவல்துறை பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற குழுவினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரது அனுமதியுடனேயே துப்பரவு பணியை முன்னெடுத்ததாக இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தமது பணியை தொடரப்போவதாக இளைளுர்கள் குவிந்து நிலை கொண்டுள்ள நிலையில் காவல்துறையினரும் ஆயுதங்கள் சகிதம் குவிக்கப்பட்டுள்ளனர்.