யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு: சிறிலங்கா காவல்துறை அடாவடி!

0
183

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை(13) பிற்பகல்-04.30 மணியளவில் யாழ்.நல்லூரிலுள்ள கிட்டுப் பூங்காவில் மாபெரும் பரப்புரைக் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிலையில் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை உடனடியாக அங்கிருந்து வெளியேறக் கோரியும், தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க கோரியும் மேற்படி கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையாக வவுனியாவிலிருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தினர். அத்துடன் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களும் வழங்கினர்.

ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்னர் மீண்டும் வவுனியா நோக்கிச் செல்வதற்காக ஆயத்தமான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வாகனத்தைப் பத்துவரையான பொலிஸார் சூழ்ந்து கொண்டு அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கடுமையாக மிரட்டியதுடன் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களைச் சந்திக்கச் சென்ற ஊடகவியலாளரொருவரையும் அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியினரின் ஏவலின் பேரிலேயே பொலிஸார் தம்மை விரட்டியடித்ததாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே நாம் எமது உறவுகளைப் பறிகொடுத்த நிலையில் கடும் வேதனையில் வாடி வருகிறோம். இவ்வாறான நிலையில் எமது ஜனநாயக உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கடும் ஆதங்கம் வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here