எந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் நினைவுகொள்ளப்படும் எனவும், உறவுகளை அஞ்சலிக்க அனைவரையும் வருமாறு தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் எதிர்வரும் கார்த்திகை 27ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒட்டி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகளில் மக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 27ஆம் திகதி எந்தவித அச்சங்களும் இன்றி அனைத்து மக்களையும் மாவீரர்களை நினைவுகூர வருமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுகின்றார்கள்.
குறித்த விடையம் தொடர்பாக விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் பணிக்குழு தலைவர் ஈசன் தெரிவிக்கையில், “எங்கள் மாவீரச் செல்வங்களின் மகத்தான நினைவு நாள் நவம்பர் 27இல் இடம்பெறவுள்ளது.
இன்றைய அரசியல் சூழ்நிலையானது பல நெருக்கடிகளும் கற்பனைகள் வியூகங்களின் மத்தியிலும், துயிலும் இல்ல நிகழ்வுகள் இடம்பெறுமா என்ற கேள்விக்கு மத்தியிலும் இந்த நிகழ்வினை நிச்சயமாக கடைப்பிடித்தே தீருவோம் என்ற அயராத உறுதியுடன் செயற்படுகின்றோம்.
இது வீண்போகாது. நிச்சயமாக மாவீரர்களின் நினைவுநாள் கார்த்திகை 27 நடைபெற்றே ஆகும். அதற்கான சகல ஒழுங்குபடுத்தல்களையும் செயற்பாட்டுக்குழு ஆகிய நாங்களும் இங்குள்ள தாயக உறவுகள், புலம்பெயர் உறவுகள், பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
வழமை போன்றே மாவீரச் செல்வங்களின் வழிபாட்டுத் தினமான கார்த்திகை 27 ஆம் நாள் நிச்சயமாக நடைபெறும். அனைத்து உறவுகளும் எமது தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த பெற்றோர்கள், உறவினர்கள் தவறாது சமூகமளித்து உங்கள் பிள்ளைகளின் தீபங்களை ஏற்றி வணக்கம் செலுத்த வருமாறு அனைத்து உறவுகளையும் அன்பாக வேண்டி நிக்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்