பிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

0
780

 பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நேற்று (08.11.2019) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பந்தன் கல்லறையில் பகல் 11.00 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கேணல் பரிதி அவர்களின் கல்லறைமீது தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்புச்செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச் சுடரினை கேணல் பரிதி அவர்களின் துணைவியார்; ஏற்றிவைக்க கல்லறைக்கான மலர் மாலையினை கேணல் பரிதியில் பெற்றோரும், கேணல் பரிதியின் சகோதரரும்; அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் வணக்கம் செய்தனர். தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் நினைவுரை ஆற்றினார். அவர்தனது உரையில் எமது தமிழீழத் தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் நல்லதொரு மைந்தனாகவும் நல்லதொரு நண்பனாகவும் சகோதரனாகவும் துன்பங்களைத் தீர்த்துவைக்கின்ற ஆறுதல்தருகின்ற ஒரு அற்புதமான நடுவனாக இருந்த கேணல் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 7 ஆம் ஆண்டிலே அந்தச் சூரியனை நாங்கள் மீண்டும் காணமுடியாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் இந்தக்காலகட்டத்தில் நாங்கள் காணும் துன்பங்களை அவர் வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளவில்லை. எதற்கும் ஒரு தீர்வு அவரால் அனைவருக்கும் கிடைத்திருந்தது. அப்படிப்பட்ட உன்னதமானவரை விடுதலையை நேசித்து விடுதலைக்காக உண்மையாக உழைத்து வீரச்சாவினை எம்கண்முன்னாலேயே தழுவிக்கொண்டவர். இந்த மாவீரர்களின் கனவு நனைவாகும் வரை – எமக்கான தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். நாம் இல்லாவிட்டாலும் எமது அடுத்த தலைமுறையினர் இதனைக் கையில் எடுத்துக் கொண்டுசெல்வர் என்ற நம்பிக்கையோடு இங்கே உறுதி எடுத்துக்கொள்வோம் என்றார். தொடர்ந்த லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றுசெல் அவர்கள் கேணல் பரிதி அவர்களின் நினைவாக சிலவார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டதுடன் நிச்சயமாக ஒருநாள் தமிழீழம் மலரும் என்று கூறி நிறைவுசெய்தார். தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கல்லறைவணக்க நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here