வவுனியாவில் மின் துண்டிப்புக்கு சென்ற மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இச் சம்பவம் நேற்றைய தினம் வவுனியா ஆச்சிபுரம் 10ஆம்ஒழுங்கைப் பகுதியில் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் மின்சார நிலுவையில் உள்ள வீடுகளின் மின்சாரத் துண்டிப்புக்காக மின்சார சபையினர் சென்றுள்ளளர். இதன்போது அவ் வீட்டாருக்கும், மின்சார சபையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் ஒன்று கூடிய பலர் மின்சார சபை வாகனத்தை நகர விடாது தடுத்து நிறுத்தியமையால் குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் மின்சார சபையினர் மீது கம்பிகளால் தாக்குதல் நடத்தினர். இதில் 5பேர் காயமடைந்ததுடன் மின்சார சபை வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 5பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சார சபையினரால் 119பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் 3பெண்களைக் கைது செய்துள்ளதுடன், இது தொடர்பில் மேலும் பலரை தேடி வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிராந்திய காரியாலயம் தெரிவித்தது.
அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.