கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களிடம் நிலத்தை பறிகொடுத்துவிட்டு போராட்டம்!

0
202

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் தங்களுக்குச் சொந்தமான விவசாயக் கணிகள் மற்றும் குடியிருப்பு நிலங்களை பெரும்பான்மையினத்தவர் மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்ற தரப்புகளிடம் பறிகொடுத்து விட்டு பல்வேறு வகையிலும் பாதிப்புக்குள்ளாகி நிற்கின்றனர்.

நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்த பிறகும் இம்மக்கள் தமது காணிகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இம்மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து நியாயம் கோரும் அடிப்படையில் சமூக எழுச்சி மாநாடுகளையும், கவனயீர்ப்புப் போராட்டங்களையும் நடத்தியிருக்கின்றனர். அது மாத்திரமன்றி தமது பிரதேச அரசியல்வாதிகளிடமும் தத்தமது சமூகம் சார்ந்த கட்சித் தலைவர்களிடமும் இது தொடர்பான கோரிக்ைகயை பல தடவை எடுத்துக் கூறியுள்ளனர். அரசாங்கத்திடமும் தமக்கு நீதி வேண்டி கோரிக்ைககளை முன்வைத்துள்ளனர். இம்மக்கள் கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேல் போராடி வருகின்றனர்.

பாதிப்புக்குள்ளான இம்மக்கள் நீதி வேண்டி பல போராட்டங்களை மேற்கொண்டும் இதுகாலவரை அவர்களுக்கான எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. தாம் நம்பியிருந்த அரசியல் கட்சி தலைவர்களினாலோ பதவியில் இருந்த அரசாங்கத்தினாலோ தீர்வு பெற்றுத் தரப்படவில்லை என்பது அந்த மக்களின் உளக்குமுறலாக இன்றுவரை இருந்து வருகின்றது. இவ்வாறான ஒரு நிலையில் அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தாலும் இன விரிசல்களாலும் பாதிப்புக்குள்ளான மக்களின் விடிவை நோக்கிய எழுச்சிப் பயணத்திலும் அந்த மக்களுக்கான நீதி வேண்டிய போராட்டத்திலும் மனித எழுச்சி நிறுவனத்தின் செயலணியான ‘காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி’ கைகொடுத்து வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான முஸ்லிம் சமூகத்தின் மூன்று தசாப்த காலமாக தீர்க்கப்படாமலுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகளை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளினால் இதுகாலவரை தீர்த்து வைக்க முடியவில்லை. எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

வனபரிபாலன சபை ஆக்கிரமித்துள்ள பொத்துவில் வேகாமம், பாலையடி வட்டை, கிரான் கோமாரி காணிப் பிரச்சினை, தொல்பொருள் வனபரிபாலன சபை ஆகிரமித்துள்ள விவசாயிகளின் ஒலுவில் அஷ்ரப் நகர் ஆலிம்சேனை பொன்னன்வெளி காணிப்பிரச்சினை, கல்லோயா அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் பெரும்பான்மையினரால் அபகரிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று அம்பலம்ஓயா, ஆலையடிவேம்பு கீத்துபத்து பாவாபுரம், சுனாமியினால் பாதிக்கப்பட்டு இதுவரை குடியிருக்க இடமின்றி அல்லல்படும் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சவூதி அரசினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டம் , கடந்த அரசாங்கத்தினால் ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிக்காக முறையற்ற வகையில் கையகப்படுத்தப்பட்ட பாலமுனை மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளை இவ்வாறு அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாக பாதிப்புக்குள்ளான அம்மக்கள் நீதி வேண்டி போராடியும் இதுகால வரைக்கும் பாதிப்புக்குள்ளான மக்களினது பிரச்சினைகள் தீர்க்கப்படா​லேயே இருந்து வருகின்றன.

​பாதிப்புக்குள்ளான மக்கள் பணச் செலவு செய்து அரசியல் தலைவர்கள் முதல் அதிகாரிகள் வரை சென்று சந்தித்து களைத்து விட்டனர். அதுமாத்திரமன்றி பாராளுமன்றம் வரை சென்று நீதி தேடி அலைந்துள்ளனர்.

நாட்களும் வருடங்களும் கழிந்ததே ஒழிய தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெற்றதாகத் தெரியவில்லை. “எமது அரசியல் தலைவர்கள் தேர்தல் காலம் மாத்திரம் வந்து உணர்வுபூர்வமாக மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தாங்கள் சார்ந்துள்ள அரசாங்கத்தின் மூலம் தீர்வு பெற்றுத் தருவோம் எனக் கூறுவது வழக்கம். அரசாங்கத்துடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளோம் என்று அறிக்கைகளை விடகின்றனர் .ஆனால் எம்மால் இனி ஒரு போதும் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது” என்கின்றனர் மக்கள்.

தாம் சார்ந்துள்ள அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும் என்கின்றபடி அந்த மக்களின் மனநிலை தற்போது காணப்படுகின்றது.

முஸ்லிம் சமூகத்தின் இன்றய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்த வரையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் பதவி பட்டங்களுக்காகவும் சுயநலத்திற்காகவும் செயற்படுகின்றார்களே தவிர தான் சார்ந்த சமூகம் நிண்ட காலமாக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கண்டதாக தெரியவில்லை.

உதாரணமாகச் சொல்லப் போனால் பசுமைப்புரட்சி என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டுள்ள சிறுபான்மை சமூகத்தவர்களின் விவசாயக் காணிகள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கனகர்புரம் கிராம தமிழ் மக்களின் குடியிருப்பு காணிகள் உட்பட இன்னும் பல முக்கியமான பல பிரச்சினைகள் சங்கிலித் தொடராக தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. அவை தீர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த விடயங்களில் அரசியல்வாதிகள் தலையிட்டு தீர்வு பெற்றுக் கொடுப்போம் என்று உறுதி கூறுவதும் இல்லை.

தமிழ் சமூகத்தைப் பொறுத்த விரையில் அந்த மக்களின் பிரச்சினைகளை ஒரே மேசையில் கூட்டமைப்பாக இருந்து பேசக் கூடிய ஒரு நிலையினை போர்க்கால சூழல் ஏற்படுத்திச் சென்றிருக்கின்றது. தமிழர்களின் பிரச்சினைகளை வெளிநாடுகளுக்குச் சென்று பேசக் கூடியளவுக்கு அவர்களது அரசியல் இன்று மாறியிருக்கின்றது.

இவ்வாறான நிலை முஸ்லிம் சமூகத்தின் அரசியலில் எப்போது உருவாக இருக்கின்றது?

முஸ்லிம் சமூகத்தின் சமூக, அரசியல், கலாசார ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் கட்சிகளிடையே மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை. இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தொடருமானால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீதுள்ள நம்பிக்கை அந்த சமூகத்தினர் மத்தியில் இல்லாமல் ஆகிவிடக் கூடிய நிலை உருவாகி சிவில் அமைப்புக்களை நாடி செல்ல வேண்டி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

எனவே காணிகளை இழந்து பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும். அரசியல் தலைமைகள் இந்த பிரச்சினைகளை இனிமேலாவது இழுத்தடிக்காமல் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருவார்களா?இதுவே பாதிப்புக்குள்ளான மக்களின் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here