2 வயது குழந்தையான சுர்ஜித் இறந்த சோகமே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் 3 வயது குழந்தை ருத்ரனும் 3 வயது குழந்தை பவழவேணியும் ஆளுக்கொரு குழிகளுக்குள் விழுந்து இறந்து விட்டனர்.
தூத்துக்குடியில் சுர்ஜித்துக்கு என்ன நடந்தது என்று தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்த பெற்றோர் தங்களது 2 வயது குழந்தை ரேவதி சஞ்சனாவை கவனிக்காமல் விட்டுவிட்டனர்.
அதனால் குளியலறைக்குச் சென்ற குழந்தை தண்ணீர் எடுக்க டிரம்முக்குள் தலையை விட்டபோது, கவிழ்ந்து மூச்சுத்திணறி நேற்று உயிரைவிட்டது. இந்நிலையில் அடுத்தடுத்த சோகம் ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி ஆருகே பண்டரகோட்டையை சேர்ந்த தம்பதி மகாராஜன் – பிரியா. இவர்களது 3 வயது மகள் பவழவேணி.
பிரியாவின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் பவழவேணியை பக்கத்தில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டில் விட்டுவிட்டு, அனைவரும் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அப்போது பவழவேணி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.
அங்கு கழிவுநீர் கொட்டுவதற்காக புதிதாக ஒரு குழி வெட்டப்பட்டிருந்தது. அதில் கால் தவறி விழுந்துவிட்டாள். இங்கு நல்ல மழை பெய்து வருவதால் இந்த குழிக்குள்ளும் நீர் நிறைந்துவிட்டது. குழந்தை குழிக்குள் விழுந்ததையும் யாருமே பார்க்கவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து பிரியா வீட்டுக்கு வந்தபோதுதான் குழந்தை குழிக்குள் உயிரிழந்தது தெரியவந்தது.
இதேபோல கோவில்பட்டியில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. லொறி சாரதி மூர்த்தியின் மகன் ருத்ரனுக்கு 3 வயதுதான். ஒண்டிப்புலி நாயக்கனூரில் தாத்தா வீட்டுக்கு ருத்ரன் வந்திருந்தான். நேற்று காலை 6.30 மணிக்கு வீட்டில் எல்லோரும் தேநீர் குடித்து கொண்டிருந்தனர். ஆனால் விளையாடி கொண்டிருந்த ருத்ரனை நீண்ட நேரமாக காணவில்லை. அதனால் ஆளுக்கு ஒரு பக்கம் தேடினார்கள். அப்போதுதான் வீட்டு அருகில் இருந்த ஒரு குழியில் விழுந்து கிடந்தான்.
வீட்டிலிருந்து 10 அடி தூரத்தில் 5 அடி ஆழம் 3 அடி அகலத்தில் அமைக்கப்பட்ட மழைநீர்த்தொட்டிக்கான குழி அது. ஆனால் அதை யாருமே மூடவில்லை. மழை அந்த மாவட்டத்திலும் பலமாக பெய்ததால், இந்த பள்ளத்தை நிரப்பி விட்டது. இதில்தான் ருத்ரன் தவறி விழுந்து கிடந்தான். அவனை தூக்கிக்கொண்டு ஆமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடினார்கள. ஆனால் ருத்ரன் எப்போதோ இறந்துவிட்டதாக டொக்டர்கள் சொன்னார்கள்.
நேற்று சுர்ஜித்.. இன்று ருத்ரன்.. பவழவேணியின் மரணங்கள் என்று பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு தந்துள்ளது. குழாய்நீர் கிணறு மட்டுமல்ல, மழைநீர் சேகரிப்பு குழியாகட்டும் தாங்கி அமைப்பதற்கான குழியாகட்டும் எந்த குழியாக இருந்தாலும் அது பிள்ளைகளின் மரண குழிகளாக இருந்துவிடக்கூடாது என்ற பீதி நிறைந்த விழிப்புணர்வு எண்ணமே இப்போதைக்கு இங்கு உடனடியாக தேவைப்படுகிறது என கூறப்படுகிறது.