சுஜித் உயிரிழப்பு குறித்து அப்துல் கலாமின் உதவியாளர் வழக்குத் தாக்கல்!

0
504

சுஜித் உயிரிழப்பு குறித்து அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த பொன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி சத்யநாராயணா அமர்வு இன்று விசாரணை நடத்த உள்ளது. பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவில் சுஜித்தின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது.

குழந்தை சுஜித் இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து 10.30 மணி அளவில் துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்து அழுகிய நிலையில் இருப்பதாக தெரிந்தது. இதனை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர் அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட பின்னர் சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, அவரது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் குழந்தை சுஜித்தின் உடல் ஆவாரம்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்று விபரீதங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதை தடுக்க, மத்திய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாட்டில் பாதுகாப்பின்றி போடப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட, அந்தந்த மாநில தலைமை செயலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை பின்பற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த பொன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here