பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற தமிழ்ச் சோலைப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு!

0
832

 பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாவது நாள் செயலமர்வு கடந்த (27.10.2019) ஞாயிற்றுக்கிழமை நந்தியார் பகுதியில் இடம்பெற்றது. தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் வளர்தமிழ் 6 தொடக்கம் வளர்தமிழ் 12 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வு காலை 09.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டதையடத்து தாய்த் தமிழகத்தில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த குழந்தை சுர்ஜித்திற்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து பயிற்றுநர்கள் சிறப்பாக குறித்த செயலமர்வை நிகழ்த்தியிருந்தனர். 2019 தமிழ்மொழித் தேர்வுகள் மற்றும் பாடத்திட்ட விளக்கத்தினை தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியக செயற்பாட்டாளர் ஆசிரியர் திரு.அகிலன் அவர்கள் நடாத்தியிருந்தார். ‘ஆசிரியவாண்மை” – உளவளம் பற்றி ஆசிரியை திருவாட்டி கை. கமலாவதி அவர்கள் சிறப்பாக விளக்கியிருந்தார். இலக்கியம் பகுதியை பேராசிரியர் கலாநிதி தனராஜா அவர்களும் பயிற்றுநர் திருமதி தி.உதயராணி அவர்களும் தனித்தனியாக வழங்கியிருந்தனர். வரலாறு பகுதியினை பயிற்றுநர் திரு.கி.தவராஜா அவர்கள் ஒளிப்படங்கள் வாயிலாக சிறப்பாக விளக்கியிருந்தார். கவிதை என்னும் தலைப்பில் பயிற்றுநர் திரு.வி.பாஸ்கரன் அவர்கள் தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார். இலக்கணம் தொடர்பில் பயிற்றுநர் திருவாட்டி சோ.சர்வேஸ்வரி அவர்கள் கையேடுகளை வழங்கி இரண்டு பிரிவுகளாக மிவும் சிறப்பாக செயலமர்வை நிகழ்த்தியிருந்தார். தொடர்ந்து ஆசிரியர்கள் தமது கற்பித்தலில் தாம் கொண்டுள்ள சந்தேகங்களை கேட்க, அதற்கு செயலமர்வை நடாத்திய பயிற்றுநர்கள் பொருத்தமான பதில்களை வழங்கியிருந்தனர். பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் உரைநிகழ்த்தியிருந்தார். அவர் தனது உரையில், ஆசிரியர்களின் பணி குறித்துப் பாராட்டியதுடன், இப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், எதிர்வரும் நவம்பர் 27 புதன்கிழமை மாவீரர் நாளில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்வதுடன் தங்கள் மாணவர்களையும் கலந்துகொள்ளச் செய்வதும் அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து செயலமர்வு நிறைவுகண்டது.

கடந்த 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை பாலர்நிலை முதல் வளர்தமிழ் 5 வரை தமிழ் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு பொண்டிப் பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here