பிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற குமரப்பா – புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல்!

0
1087

 இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2 ஆம் லெப்.மாலதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரகாவியமான மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவ்றி சூர்சென் பகுதியில் கடந்த 26.10.2019 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு உணர்வெழுச்சியாக இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – இவ்றி சூர்சென் பிரெஞ்சு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச் சுடரினை இவ்ரி சூர்சென் தமிழ்சங்கத் தலைவர் திரு.சாந்தகுமார் சாந்தலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடரினை 23.11.1999 அன்று இலுப்பைக்கடவைப் பகுதியில் வீரகாவியமான மேஜர் செங்கோட்டையன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். அரங்க நிகழ்வுகளாக தமிழ்சோலை மற்றும் நடனப் பள்ளி மாணவிகளின் மாவீரர்களின் நினைவு சுமந்த நடனமும், தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பாடகர்களின் விடுதலைப் கானங்களும், கவிதையும் இடம்பெற்றிருந்தன. சிறப்பு உரையினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் மாவீரர்களின் உயிர்த்தியாகங்கள் பற்றிக் குறிப்பிட்டதோடு, வரும் நவம்பர் 27 அன்று அனைவரும் ஒருமித்து மாவீரர்களை நினைவுகொள்ளத் தயாராகவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here