கிளிநொச்சியில் உப்பளம்:எதிரான பேரணியை தடுத்த பொலீஸார்!

0
358

கிளிநொச்சி – செருக்கன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் உப்பள தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (24) இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி தேர்தல்கள் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி ஏ-9 வீதி ஊடாக பரந்தன் – முல்லைத்தீவு வழியாக செருக்கன் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் உப்பள தொழிற்சாலை வரை செல்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தது.

குறித்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு செருக்கன் சந்தியை சென்றடையும் போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இயற்கையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது. பேரணி தொடர்பாக கிளிநொச்சியில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைவாக அது பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் முறைப்பாட்டு பிரிவின் உதவி தேர்வத்தாட்சி அலுவலர் எஸ்.சத்தியசீலன் குறித்த பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். குறித்த போராட்டம் மேற்கொள்வதற்கு உரிய முறையில் பொலிஸாரிடம் அனுமதி பெறப்படவில்லை எனவும், அவ்வாறான அனுமதியை பெற்று போராட்டங்களை முன்னெடுக்குமாறும் அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த உப்பள தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை தேர்தல் காலம்வரை நிறுத்துவதற்கான கடிதம் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் போராட்டகாரர்களிடம் சத்தியசீலன் கூறினார். அதன் பின்னர் குறித்த போராட்டம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here