வடக்கு , மேல், வடமேல் , தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்போது, காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, மேல் மாகாணத்தின் கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீட்டர் வரை காற்று அதிகரித்து வீசும் என்பதால், மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாமென குறித்த பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 65 குடும்பங்களை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளான சாந்திபுரம், ஜீவபுரம் ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 65 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் அருகிலுள்ள பாடசாலை மற்றும் ஆலயங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் புத்தளம் மாவட்டத்தின் நுரைச்சோலை பகுதியில் 107.4 மில்லிமீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 4326 குடும்பங்களைச் சேர்ந்த 15,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 1,116 குடும்பங்களை சேர்ந்த 4,443 பேர் 13 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.