புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமே ஜெயந்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு நேற்று (23) சென்ற பயங்கரவாத விசாரணை பிரிவினர் அழைப்பாணை கடிதத்தை கையளித்து சென்றுள்ளனர்.
குறித்த கடிதத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதனால் நாளை (25) 10 மணிக்கு இரண்டாம் மாடி, புதிய செயலக கட்டிடம், கொழும்பு 1 எனும் முகவரியில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விசாரணையை எமது பகுதிக்கு அண்மையில் நடத்தாது கொழும்புக்கு எம்மை அழைத்து செலவுகளையும் மனரீதியான உளைச்சலையும் ஏற்படுத்துகிறார்கள் தவிர நாம் எந்தவித பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் விசாரிப்பதாக இருந்தால் எமது பகுதிக்கு அண்மையில் விசாரிக்க முடியும் எனவும் எதிர்காலத்தில் எம்மைப் போன்றவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு செய்கிறார்களா எனவும் குறித்து உறுப்பினர் கருத்து தெரிவிக்கும் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் கடந்த மே மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் ச.தவசீலனிடம் அண்மையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. அத்துடன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரனை இன்று (24) பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.