சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு யுத்தத்தில் கொள்ளப்பட்ட உறவுகளை நினைவு கூருவதற்கு நாளை முதல் முள்ளிவாய்க்கால் வாரம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த இறுதி யுத்தத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கையில் எழுபது ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போல் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமிழ் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இந்த படுகொலையை ஒரு நினைவு தினமாக மே பதினெட்டை அனுஷ்டித்து வந்த நாங்கள் மே பதினொன்று முதல் மே பதினெட்டு வரையான காலப்பகுதியை தமிழ் இனப்படுகொலை வாரம் என அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
ஆகவே இந்த படுகொலைகளை நினைவு கூறக்கூடிய விதத்திலே மக்கள் பெரிய அளவிலே துணிந்து முன்வந்து அனுச்டிப்பதன் ஊடாகத்தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதியை கோரி நிற்கின்றோம் எங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு தேவை என்ற விடயத்தை பொறுப்பு கூறலை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் பாதிக்கப்பட்ட எங்களுடைய மக்களுக்கு நிவாரணம் நீதி கிடைக்க வேண்டும் என்பதை உலகத்திற்கு சொல்லக்கூடிய விதத்தில் மக்கள் ஆர்ப்பரித்து பல்லாயிரக்கணக்கில் எழவேண்டும்.
குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் உயிரிழந்த மக்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர்கள் செய்தது போன்ற அஞ்சலியை நாமும் முள்ளிவாய்கால் உட்பட அனைத்து இடங்களிலும் அஞ்சலி செலுத்துவது எந்த விதத்திலும் எந்த சட்டத்தையும் மீறும் செயலாக அமையாது.
அவ்வாறு நாம் அஞ்சலி செலுத்துகின்ற போது இலங்கை அரசின் படைகள் தடுக்குமாக இருந்தால் அதனை அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் நன்றாக புரிந்து கொள்ளும். ஆகவே எங்களுடைய மக்கள் தமது உறவுகளை பறிகொடுத்த மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஒன்று கூடி உரிய இடங்களில் நடைபெறுகின்ற தமிழ் இனப்படுகொலை வார நிகழ்வுகளில் கலந்து கொள்வதோடு தாமும் அஞ்சலிகளை செலுத்த வேண்டும்.
இவ்வஞ்சலியை இலங்கை ஆட்சியாளர்கள் எவ்வளவு வன்முறைகள் பிரயோகித்து தடுத்தாலும் எமது மக்கள் கொல்லப்பட்டதனை அனுஷ்டித்தே காட்டுவோம். என்றார் அவர்.
!