இலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை!

0
336

ஆரம்பத்தில் திருகோணமலை 11 பேர் கடத்தல் விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் இலங்கை நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அதுவே தோல்வியின் அடையாளமா மாறியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வழக்கில் திருகோணமலை கடற்படை புலனாய்வுப் பிரிவின் கட்டளைப்பீட பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட மூத்த கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பும், பதவியுயர்வும் வழங்கப்பட்டிருப்பது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் 11 பேர் காணாமற்போன விவகாரம் தொடர்பில் இலங்கைக்குள் கடந்த 10 வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களை, அங்கிருந்து தப்பியவர்கள் மற்றும் கடற்படைத்தள சாட்சியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களுடன் ஒப்பீடு செய்யும் அறிக்கையொன்று ‘முற்றாகப் பாராமுகம் காட்டும் இலங்கைக் கடற்படை’ என்ற பெயரில் அறிக்கையொன்று சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் இன்று வெளியிடப்பட்டது. 

இவ்வழக்கு விசாரணையில் இடம்பெற்றிருக்கும் பாரதூரமான தவறுகள், பொருந்தாத தன்மை, அரசியல் தலையீடுகள் போன்றவை அந்த அறிக்கையின் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

2009 ஆம் ஆண்டு போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை என்பதுடன், இத்தகைய சித்திரவதைகள் தனியொரு கடற்படைத்தளத்தில் மாத்திரம் இடம்பெறவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here