அவுஸ்திரேலியாவின் பத்திரிகைகள் பல நேற்று தலைப்புச் செய்திகள் அகற்றப்பட்ட முதல் பக்கங்களை வெளியிட்டன. ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து நாளிதழ்கள் இவ்வாறு செய்துள்ளன.
நேற்றுக் காலையில் வெளிவந்த நியூஸ் கார்ப் அவுஸ்திரேலியா மற்றும் நைன் மாஸ்ட்ஹெட்ஸ் ஆகிய இரண்டு பெரும் செய்தித்தாள்களும் தங்களின் முதல் பக்கத்தில் செய்தியை கறுப்பு மையால் மறைத்து அதற்கு மேல் ‘ரகசியம்’ என்ற வாசகத்துடன்கூடிய சிவப்பு நிற முத்திரையுடன் வெளிவந்தன.
இந்த நூதன போராட்டமுறை அந்நாட்டில் உள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக நடத்தப்படுகிறது.
அரசாங்கம் மக்களிடமிருந்து என்னென்ன இரகசியங்களை மறைத்துள்ளது என்ற கேள்வியைக் கேட்கும் விளம்பரங்களும் அந்நாட்டின் தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றன.
அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி தொலைக்காட்சி அலுவலகங்களையும், நியூஸ் கோப் செய்தியாளரின் வீட்டையும் பொலிஸார் சோதனையிட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கு எதிரான தகவலறியும் உரிமைக்கான ஊடகச் சுதந்திரக் கூட்டணியின் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.