வட பாகிஸ்தானில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தொன்றில் நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவிக்கிறது.
ஜில்கித் பால்ரிஸ்தான் மலைப் பிராந்தியத்தில் அவசரகால நிலைமையின் கீழ் அந்த உலங்குவானூர்தி தரையிறங்குகையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இந்தோனேசிய மற்றும் மலேசிய தூதுவர்களின் மனைவியரும் இரு பாகிஸ்தானிய இராணுவ விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.
ஜில்கித் பிராந்தியத்தில் சுற்றுலா திட்டமொன்றின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொள்ளவே அவர்கள் பயணத்தை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி உலங்குவானூர்தி விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை.
இந்த விபத்தில் நோர்வே தூதுவரான லெயிப் லார்ஸென், பிலிப்பைன்ஸ் தூதுவரான டொமிங்கோ லுசெனாரியா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தானிய இராணுவ பேச்சாளர் அஸிம் பஜ்வா தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்தில் போலந்து மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளதாக அவர் கூறினார்.
அந்த எம்.ஐ.-–17 விமானத்தில் 11 வெளிநாட்டவர்களும் 6 பாகிஸ்தானியர்களும் பயணித்துள்ளனர்.
பிராந்திய இராணுவ பாடசாலைக்கு சொந்தமான கட்டடத்தின் மீது மோதியே அந்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் தரையிலிருந்த எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
சுற்றுலாப் பயணிகளுக்காக விமானப் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட திட்டமொன்றின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொள்ள மூன்று உலங்குவானூர்திகளில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழைத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ்ஷெரீப் மேற்படி திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவிருந்ததாகவும் இந்த உலங்கு வானூர்தி அனர்த்தத்தையடுத்து அவர் அங்கிருந்து திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.