உந்துருளியில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு பயணித்த 70-75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் முன்னே சென்ற உழவு இயந்திரத்தின் மீது மோதி நெஞ்சுப்பகுதி பலமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மாலை 6.10மணியளவில் கொக்காவில் சந்திக்கும் முறிகண்டிக்கும் இடையில் (தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் முன்னால்) இடம்பெற்றது.
அங்கிருந்த இளைஞர்களால் அவசர அம்புலன்ஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.
நடுவீதியில் உந்துருளி காணப்பட்டது.
வீதியின் கரையில் அந்த முதியவர் கண்பகுதியில் இரத்தம் வழிய கிடந்தார். காலொன்று முறிந்திருக்கும் என நினைக்கின்றேன். வாயை ஆட்டினார்.நெஞ்சுப்பகுதி இறுக்கமாக இருந்தது. தண்ணீர் முகத்தில் தெளித்து சற்று நேரத்தில் ஆட்டம் அசைவில்லை. அவரது உடல் சில்லென்று குளிர்ந்தது. அவரது தொலைபேசி உந்துருளியின் அருகே கிடந்தது.அவர் இறுதியாக அழைக்கப்பட்டிருந்த சுதா எனும் இலக்கத்திற்கு தொடர்புகொண்டபோது “எவடத்திலை அப்பா போறியள்” என பெண்குரல் துயரமிகுதியால் என் குரல் அமைதியானது. சுதாகரித்தவனாக அப்பா கொக்காவிலில் விபத்தில் மயக்கமாக கிடக்கிறார். அம்புலன்சுக்கு சொல்லியாச்சு வந்து கொண்டிருக்கு கிளிநொச்சிக்கு வாங்கோ என்று சொன்னேன் நான் இவ்வாறு கூறும்போது அவரது தந்தையின் உயிர் பிரிந்துவிட்டது. ஆனால் எவ்வாறு அவரது மகளுக்கு சொல்வது.
மாங்குளத்திலிருந்து வந்த அம்புலன்சில் அவரது உடலை ஏற்றிவிட்டு வந்தேன். வழி நெடுகிலும் துயரம் விபத்துக்களால் நாளாந்தம் பறிக்கப்படும் உயிர்கள் எத்தனை எத்தனை. வயது போனவர்களை தயவு செய்து இரவுகளில் மோட்டார்வண்டியோ வாகனங்களோ செலுத்த அனுமதிக்காதீர்கள் உறவுகளே.
- எஸ். தவபாலன்.