சாவகச்சேரி கச்சாய் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரை சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்த சக இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை வழங்கி யாழ்.மாவட்ட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த கொலை சம்பவம் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கண்ணால் கண்ட சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே புத்தளம் மாவட்டத்தினைச் சேர்ந்த திசாநாயக்க முதியான் சேலாகே பிரியந்த திசாநாயக்க என்னும் இராணுவ சிப்பாய்க்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி சாவகச்சேரி கச்சாய் பகுதியில் இருந்த இராணுவ முகாமிற்குள் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக குறித்த முகாமினைச் சேர்ந்த சக இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த வழங்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று ஆலோசனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் குறித்த வழக்கு விசாரணைக்காக யாழ்.மாவட்ட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீண்ட காலமாக குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மேற்படி வழங்கு தீர்ப்பிற்கான யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதிபதி குறித்த சம்பவம் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி மன்றிற்கு வழங்கிய சாட்சியத்தில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயம் உடனடியாக மரணத்தினை ஏற்படுத்தியுள்ளமை தெட்டத் தெளிவாக கூறுகின்றது. மேலும் சம்பவத்தினை கண்ணால் கண்ட சாட்டிசியங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி எதிரிமீது குற்றங்களை நீருபிக்கப்பட்டது. எனவே மன்று எதிரியைக் குற்றவாளியாக கருதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.