வடமராட்சி பகுதியில் நேற்று காலை பொலிஸாருக்கும் சட்டவிரோத மண் அகழ்வு கும்பலுக்குமிடையில் மோதல் ஒன்று இடம் பெற்றுள்ளது. மேற்படி மோதலில் 2 பொலிஸார் தாக்கப்பட்டதுடன் மண் அகழ்வு குழுவைச் சேர்ந்த நபர் ஒருவரும் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வடமராட்சி வல்லிபுர ஆலய அருகில் சட்டவிரோதமாக சிலர் மண் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு பிரதேச செயலர் மற்றும் அரசாங்க அதிபரினால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து 5 பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று குறித்த மண் அகழ்வை முறியடிக்கச் சென்றதாகவும், அவ் வேளை மண் அகழ்வு குழுவினரார் 2 பொலிசார் தலையில் தாக்கப்பட்டு அவர்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொலிசாரின் துப்பாக்கியை மண் அகழ்வுக் குழுவினர் பறிக்க முற்பட்ட போது தவறுதலாக துப்பாக்கியிலிருந்த ரவை அகழ்வுக் குழுவில் ஒருவரின் தோளில் பாய்ந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில், மண் அகழ்வுக்குழு கருத்து தெரிவிக்கும் போது தம்மை நோக்கி பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடாத்திக்கொண்டே சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அதனாலேயே சாரதி படுகாயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.