நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பலபிடியவின் உத்தரவிற்கமைய நேற்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க குருணாகல் நீதவான் ரவீந்ர பிரேமரத்ன உத்தரவிட்டார்.
கடந்த ஆட்சிக்காலத்தின்போது இடம்பெற்ற வட மேல் மாகாண சபை தேர்தலின்போது சதொச கிளைகளினூடாக 52 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து பணம் வழங்காத குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து நேற்று முன்தினம் (5) பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
இவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு நேற்று காலை குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
சதொச நிறுவ னங்களினூடாக நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இவருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிலும், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவிலும் குருணாகல் பொலிஸிலும் முறையிடப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய வாக்கு மூலம் பெறுவதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாந்து நேற்று முன்தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவரிடம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் வரை வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.
குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்ணாந் துவுடன் ச. தொ. ச நிறுவன முன்னாள் தலைவரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது பெருந்திரளான மக்கள் நீதிமன்ற வளாகத்திலும் அதற்கு வெளியிலும் திரண்டிருந்தனர்.