பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் கொலை வெறித் தாக்குதல் நால்வர் பலி!

0
1179

பிரான்சின் தலைநகரில் இன்று வியாழக்கிழமை நண்பகலில் காவல்துறை தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தாக்குதல் நடத்திய அதிகாரியும் ஒரு காவல்துறை அதிகாரி எனவும், கூரான கத்தி ஒன்றின் மூலம் சக அதிகாரிகளை சரமாரியாக தாக்கியுள்ளார் எனவும் அறிய முடிகிறது. தாக்குதல் நடத்திய அதிகாரி, 13:00 மணிக்கு, 4 ஆம் வட்டாரத்தின் l’Île de la Cité இல் உள்ள தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்துள்ளார். கூரான கத்தி ஒன்றின் மூலம் முதலில் பெண் அதிகாரி ஒருவரை குத்தி கொன்றுள்ளார்.  அதைத் தொடர்ந்து மேலும் இரு அதிகாரிகளை கத்தியால் குத்தி தாக்கி கொலை செய்துள்ளார். நான்காவது அதிகாரியை தாக்க முற்படும் போது  அவர் பிற அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இச்சம்பவத்தில் மொத்தமாக தாக்குதல் நடத்திய அதிகாரியையும் சேர்ந்து நான்கு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய அதிகாரி 45 வயதுடையவர் எனவும், என்ன காரணத்துக்காக அவர் இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தார் என  அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய அதிகாரி காவல்துறை பணியில் 20 வருடங்கள் அனுபவம் கொண்டவர் எனவும் அறிய முடிகிறது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இருக்கும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளன. சுற்றி இருக்கும் அனைத்து மெற்றோ மற்றும் தொடருந்து நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. சம்பவ இடத்துக்கு பிரதமர் Édouard Philippe, உள்துறை அமைச்சர் Christophe Castaner மற்றும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here