சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு!

0
424

இந்திய அரசிடம் 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை 12 நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர்; ஏற்றப்பட்டு அகவணக்கம், சுடர்வணக்கம,; மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர்; மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் சுவிஸ் தமிழீழ இசைக்குழுவினரோடு இளம் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் காணிக்கையாக்கப்பட்டன.

இவ்வெழுச்சி நிகழ்வில், இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவுகள் சுமந்து கனத்த இதயங்களுடன் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதோடு, மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டமையானது எழுச்சியுடன், மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது. தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த இவ் வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், எழுச்சிக் கவிதைகள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், தியாகதீபம் அவர்களது வரலாற்றுப்பயணம் சார்ந்த சிறு காணொளித் தொகுப்பும் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டதோடு, காலத்திற்கேற்ப கருப்பொருளைக் கொண்ட எழுச்சிப்பேருரையும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

(சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here