பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் கூட்டுறவு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (6) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சராக பதவி வகித்தபோது சதொச நிறுவனங்களிலிருந்து சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்று பணம் வழங்காமல் மோசடி செய்த சம்பவம் தொடர்பிலே இவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று காலை 10.30 மணிக்கு நிதி மோசடி பிரிவுக்கு ஆஜரானார். இவரிடம் பிற்பகல் வரை வாக்கு மூலம் பெறப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
அமைச்சராக பதவிவகித்தபோது சதொச நிறுவனங்களினூடாக பணம் செலுத்தாமல் 52 இலட்சத்து 75, 316 ரூபா பெறுமதியான பொருட்களை பெற்று நிதி மோசடி செய்ததாக இவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
லங்கா சதொச பிரதான அலுவலக சிரேஷ்ட கணக்காளர் இந்த முறைப்பாட்டை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு கடந்த மாதம் 22 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதன்படி இந்த நிதி மோசடி குறித்து பூரண விசாரணை நடத்துமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணை, பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சதொச நிதி மோசடி குறித்து வாக்கு மூலம் பெறுவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு ஆஜராகுமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிதி மோசடி தொடர்பில் குருணாகல் பொலிஸினூடாகவும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் பல தடவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
நேற்று பிற்பகல் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் கைதான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடியவின் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது சந்தேக நபரை இன்று (6) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவரை இன்று குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பணித்தார். இதன்படி அவர் இன்று குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.