பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு!

0
330

சிறிலங்கா பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் ஒன்று இன்று (02.10.2019) புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் 17.00 மணிவரை இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமிழீழத் தேசியக் கொடிகளையும் சிறிலங்கா பேரினவாத அரசின் வன்கொடுமைகளைக் குறிக்கும் பதாகைகளையும் கைகளில் தாங்கியிருந்தனர். கலந்துகொண்ட மக்களின் சார்பில் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சிறிலங்காவின் இனவாதம் குறித்து சான்று பகரும் உரைகளும் இடம்பெற்றிருந்தன. நிறைவாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில் தெரிவித்ததாவது:- சிறிலங்கா அரசானது தமிழின அழிப்பை இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த இன அழிப்பின் பிரதிபலிப்பாக நம்மில் ஒரு பகுதியினர் தாய்த் தமிழகத்திலும் ஒருபகுதியினர் தாய்மண்ணிலும் மற்றொரு பகுதியினர் உலகம் முழுவதும் பரந்து வாழுகின்றோம். அதுமட்டுமல்லால் தமிழர்களுடைய அடுத்த தலைமுறையினரையும் விடுதலைப் பயணத்தில் பங்குகொள்ள வைத்து, அவர்களுடைய அளப்பரிய பங்கை ஏற்றும் போற்றியும் நிற்கின்றவேளை, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஒரு தனிவரலாறு இருக்கின்றது என்று புத்தகங்களிலும் பெரும் காவியங்களிலும் உணர்த்திவரப்படும் அந்த விடயங்கள் இன்று கீழடி என்ற இடத்திலே மண்ணுக்குள்ளே புதைந்துபோன எமது தமிழர்களின் வரலாறு, தொன்மைமிக்க சான்றுகள் கண்முன்னாலேயே கண்டெடுக்கப்பட்டு அது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வகத்தில் பரிசீலனை செய்யப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்ட துணிவோடும் நிமிர்வோடும் நிற்கின்றோம். தமிழினம் உலகின் மூத்த குடி என்பதைப் பறைசாற்றி நிற்கும் இந்தவேளையில், நாம் தொடர்ந்து போராடவேண்டிய தேவை எழுந்துள்ளது என்பதாக அவருடைய உரை தொடர்ந்தது. அதனையடுத்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் போராட்டம் நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here