வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இருக்கும் பலாலி இராணுவமுகாமின் நுழைவு வாசலுக்கு முன்பாக வசாவிளான் மக்கள்கற்பூரமேற்றி வைரவக் கடவுளை வழிபட்ட சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (05.05.2015) நடைபெற்றுள்ளது.
புதிய ஜனாதிபதி பதிவியேற்ற பின்னர் கொண்டுவரப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டத்திலாவது வசாவிளான் ஆலயப்பகுதி விடுவிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். அது நிறைவேறாத நிலையில், மே மாத மடைத் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு முன்னோடியாக இன்று ஆலயத்துக்குச் சென்று வழிபடுவது என்று தீர்மானித்த நூற்றுக் கணக்கான வசாவிளான் மேற்கு மக்கள் இராணுவ வளைவுக்கு முன்னால் திரண்டனர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு அறிவித்து அவர்களையும் அப்பகுதிக்கு வரவழைத்திருந்தனர்.
இராணுவமுகாம் நுழைவு வாசலில் கடமையில் இருந்த படையினரிடம் ஆலய வழிபாட்டுக்காக வந்திருக்கிறோம் என்பதை படை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் உள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. அத்தோடு பொதுமக்களைச் சந்திப்பதற்கு படை அதிகாரிகளும் நீண்டநேரமாகியும் சமூகமளிக்கவில்லை. இந்நிலையிலேயே,சினம் கொண்ட மக்கள் முகாம் வாசலுக்கு முன்பாக சிதறு தேங்காய் உடைத்து, கற்பூரம் கொழுத்தி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். முகாம் வாசலில் கற்பூரவழிபாட்டைச் செய்யவேண்டாம் என்று கடமையில் இருந்த இராணுவத்தினர் ஆரம்பத்தில் சொன்னபோதும், பொதுமக்கள் திரளாக வழிபட ஆரம்பித்ததும் விலகிச் சென்றுவிட்டனர்.