இந்துகுருமார் ஒன்றியம் முல்லைத்தீவு நீராவியடிபிள்ளையார் ஆலயசூழலில் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அமைதியின்மையைக் கண்டித்து நேற்றுமுன்தினம் மாலை கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியம் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தகண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து குருமார் கலந்துகொண்டு அமைதியாகத் தமதுகண்டனத்தைத் தெரிவித்த நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.
கடந்த 23ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீராவியடியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையானது அனைவரும்வெட்கித் தலைகுனியவேண்டிய விடயமாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும். ‘இதுபௌத்தநாடு’ என பிக்குமார் கூறுவது ஏற்புடையதல்ல. அதுமட்டுமல்லாமல் நீதித்துறையை பிக்குமார் அவமதித்துள்ளார்கள். தொடர்ந்து இவ்வாறான செயற்பாடானது இடம்பெற்றுவருகின்றது.
எனவேஇச்செயற்பாட்டை கிழக்கில் வாழுகின்ற இந்துக்கள் சார்பாகவும், இந்துமத அமைப்புக்கள் சார்பாகவும், எமது இந்துமதகுருமார் ஒன்றியம் சார்பாகவும் எமதுநாட்டின் இந்துமத பொக்கிசங்கள் நிறைந்த இடமாகபோற்றப்படுகின்ற முல்லைத்தீவு நீராவீயடிப் பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மையை சீர்கெடுத்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திருகோணமலை கன்னியாவிலும் முல்லைதீவிலும் நடைபெற்ற தகாத சம்பவங்கள் எமது இந்துசமயத்தை தொடர்ச்சியாக அவமதித்து வருகின்ற செயற்பாடுகளாகவே இருந்துவருகின்றது. நாட்டின் நல்லாட்சி என்றபெயரில் எமதுமக்கள், எமது மதம்,எமது கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றில் பாரிய களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை ஒருநாளும் மன்னிக்கமுடியாது. எம்மைப் படைத்த இறைவனும் ஏற்றுக்கொள்ளமாட்டார். இதுதெய்வ நிந்தனையும்கூட, எனவே தயவுசெய்து எமது இந்துமத அலுவல்கள்அமைச்சர் மற்றும் கிழக்குமாகாணஅரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரவேண்டும்.
இச்சம்பவத்தை கிழக்குமாகாண இந்துகுருமார் ஒன்றியம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.