ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு மகிழுந்தில் சொந்த ஊர் திரும்பிய போது கடலூர் அருகே பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 35). இவரது நண்பர்கள் பங்கஜ்குமார் (38), சுபாஷ் (35), மேஷக் (38) தொழிலதிபர்கள். இவர்கள் நால்வரும் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இடையே நடந்த போட்டியை நேரில் பார்த்து ரசித்தனர். இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. அந்த சந்தோஷத்துடன் இரவில் சாப்பிட்டுவிட்டு நள்ளிரவில் மீண்டும் ஊருக்கு மகிழுந்தில் புறப்பட்டனர். சுபாஷ் காரை ஓட்டினார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று காலை 6 மணி அளவில் வந்தபோது திடீரென மகிழுந்து நிலைதடுமாறியது. இதனால் பின்னால் வேகமாக வந்த பாரவூர்தி மகிழுந்தின் பின்புறம் மீது மோதியது. இதில் மகிழுந்து தலைகுப்புற கவிழ்ந்தது. சரண்ராஜ், பங்கஜ் குமார் ஆகியோர் மகிழுந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சுபாஷ், மேஷக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து காரணமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சரண்ராஜ், பங்கஜ்குமார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தோசமாக ஐ.பி.எல் கிரிக்கெட் பார்த்துவிட்டு திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.