நான் அறிய என்வீட்டின் முதற்சாவு இற்றைக்கு 24 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் இடம்பெற்றது.
திருகோணமலை இறக்கக்கண்டி முகாம் தகர்ப்பில் என் மூன்றாவது அண்ணன் வீரச்சாவடைந்திருந்தான்.
ஒரு போராளி என்பவன் எப்படி இருப்பான் என்பதற்கு அவன் ஓர் உதாரணம். ஐந்து ஆண்டுகளில் இரண்டாண்டு இடைவெளியில் இருமுறை லீவில் வந்து சென்றான். அந்த இரண்டு வரவின் போதும் ஒரே ஜீன்ஸ் ஒரே சேட்தான் அவன் அணிந்திருந்தான். அவனிடம் இருந்த ஒரே மாற்றுடை அது ஒன்றுதான் அதைவிட மேலதிகமாய் அவனுக்கு களத்தில் சிவில் உடை தேவைப்பட்டிருக்காதென்றே நினைக்கிறேன்.
எங்கள் வீட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த முகாமில் பல மாதங்கள் நிர்வாக அலுவலாக தங்கி இருந்தான் எனினும் ஒரு முறை கூட அப்போது எம் வீட்டுக்கு வந்ததில்லை. அம்மா பார்க்கப்போனாலும் அம்மா இங்க என்னோட இருக்கிற பொடியள் எல்லாம் மட்டக்களப்பு அம்பாறை பொடியள் அவங்கள் பலவருசமா அம்மா அப்பாவை சகோதரங்களை பார்க்காமல் இருக்கிறாங்கள் என்னை நீங்கள் அடிக்கடி வந்து பார்த்தா அவங்களுக்குள்ளும் ஒரு ஏக்கம் வரும் அதால அடிக்கடி என்னை பார்க்க வராதிங்க என்று சொல்வதோடு இதே காரணத்தைச் சொல்லி அம்மா தைச்சுக்கொண்டுபோகும் ஜீன்ஸ் சேட்டுக்களையும் திருப்பி அனுப்பிவிடுவான்.
சாப்பிட பலகாரங்கள் மட்டும் செய்து கொடுத்துவிடச்சொல்வான் அதில் அவனுக்கு பிடிக்காத பலகாரங்கள்தான் அதிகம் இருக்கும் இதெல்லாம் அவனுக்கு பிடிக்காதே இப்ப எப்பிடி சாப்பிடப்பழகினான் என்று அம்மா யோசிப்பா…அவனுக்கு அது பிடிக்காதிருப்பினும் அவன் நண்பர்களுக்கு அது பிடிக்கும் என்பதால் அவற்றையே அதிகம் செய்துகொண்டுவரச்சொல்லுவான்.
திருகோணமலையில் வீரச்சாவடைந்த அவனையும் அவனோடு வீரச்சாவடைந்த ஏனைய இரு மாவீரர்களின் வித்துடல்களையும் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் கிளிநொச்சிக்கு கொண்டுவந்திருந்தனர் அவனது படையணியினர். அக்காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் இவ்வாறு வித்துடல்கள் கிழக்கில் இருந்து கொண்டுவரப்படுவதில்லை அவ்வவ் பிரதேசத்திலேயே விதைக்கப்பட்டு நினைவுக்கல் மாத்திரமே இங்கு நாட்டப்படும்.
இறப்பில் கூட சிரித்த முகத்தோடுதான் அவன் இருந்தான். எங்கள் வீட்டின் அச்சாணியாய் திகழ்ந்தவன் எம்மை உள்ளங்கையில் வைத்து ஏந்தியவன். தேசக்கடமையினையும் சீராய் ஆற்றி மண்ணிற்கென மரணித்தும் போனான்.
எருக்கலம் பற்றையோடு கிடக்கும் இவை வெறும் கற்குவியல் அல்ல ஒவ்வொன்றும் ஓர் ஆத்மாவின் உயிர்த்துடிப்பு.
சுப்பிரமணிய பிரபா.