
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு நகர் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். ஜயவர்தனபுர பாராளுமன்ற கட்டடத் தொகுதியை சூழவுள்ள தியவன்னா ஓயாவின் நீர் மட்டமும் தற்போது உயர்வடைந்துள்ளது. கொழும்பில் இன்று சுமார் 67 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்தது. கொட்டாஞ்சேனை ஆமர் வீதி, பாபர் வீதி, ப்ளூமெண்டல் வீதி, புனித ஜேம்ஸ் வீதி, கோட்டை ரெக்லமேஷன் வீதி, ஜிந்துப்பிட்டி சந்தி மற்றும் கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி ஆகிய இடங்களில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொழும்பு நகரின் பல்வேறு இடங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நகரூடாகக் காணப்படும் பெரும்பாலான வடிகாண்கள் நிரம்பிய நிலையில், தாழ்நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கின. கொழும்பு நகரின் சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கினர். அசுத்தமான நீர் வடிகாண்களிலிருந்து வெளியேறியமையால், சுகாதாரப் பிரச்சினைகளும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.