கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத் தொடரின் வியன்னா பிரகடனத்தின் கண்காணிப்பும் அமுல்படுத்தலும், வேலைத்திட்ட நிகழ்ச்சி நிரலும் என்ற தலைப்பிலான பொது விவாதத்தில் விடயம் 8 ன் கீழ் 23-09-2019 திங்கட்கிழமை ஆற்றிய உரை வருமாறு.
ஐ.நா சபை சுயநிர்ணய உரிமையை வெறும் காட்சிப்பொருளாக கையாளும் வரை அந்த உரிமைக்காகப் போராடுவோர் பலியாக்கப்பட்டுக்கொண்டேயிருப்பார்கள். – ஐ.நா.ம.உ.பே ல் கஜேந்திரகுமா
மதிப்பிற்குரிய உப தலைவைர் அவர்களே, வியன்னா தீர்மானமும் வேலைத்திட்ட நிகழ்ச்சி நிரலும் ஒரு மக்கள் கூட்டம் தமது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை அடைய நியாயமான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை அங்கீகரிக்கின்றன. இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழ்த் தேசமானது இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு மத்தியில் தனது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க தொடர்ந்து போராடி வருகின்றது. இலங்கை அரசு தமிழ்த் தேசத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்த போது தமிழ்த் தேசம் ஆயுதங்களை ஏந்திப்போராட நிர்ப்பந்திக்கப்பட்டது. இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேச விடுதலை போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவ்விரு தரப்புக்களுக்கும் இடையில் போர்க்களத்தில் ஏற்பட்ட இராணுவச் சமநிலையே இந்த ஒப்பந்தத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அச்சந்தற்பத்தில் தமிழர் தாயகப் பிரதேசத்தின் 75% ஆன நிலப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் அமைதிந்திருந்தது. இந்த கள நிலவரங்களும், கள சமநிலையும் முழுமையாக மீளுருவாக்கம் செய்யப்பட்ட சமஸ்டி அரச முறையின் அடிப்படையில் ஈழத் தமிழ்த் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனூடாக ஈழத் தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கக்கப்படும் எனவும் எதிர்பாக்கப்பட்டது. எனினும் நடந்தேறியதோ அதுவல்ல. இலங்கை அரசாங்கமும் அதன் சர்வதேச அனுசரணையாளர்களும் ஒரு இராணுவத் தீர்வை நாடினர். இதனால்; ஏற்பட்ட விளைவுகள் மனித உரிமைகள் பேரவை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கையை விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டதுடன் அதனூடாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை மீதான அறிக்கையை வெளியிடவும் நேர்ந்தது. இந்த மனித உரிமைகள் பேரவையும், ஐக்கிய நாடுகள் சபையும சுய நிர்ணய உரிமையினை வெறுமனே ஒர் காட்சிப்பொருளாக் கையாளும் வரையில், இம்மறுக்கமுடியா உரிமைக்காகப் போராடுபவர்கள் என்றும் பலியாக்கப்படுவார்கள் என்பதே நிதர்சனம்.