திலீபன் வைத்த கோரிக்கை தமிழ் மக்களின் கோரிக்கையாகும். அதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமைதான். அவன் தமிழீழம் தாருங்கள் என்று கேட்கவில்லை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒத்துக்கொண்ட ஐந்து அம்சக்கோரிக்கைகளையும் நிறைவேற்றுங்கள் என்று தான் கோரினான் .
12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக 265 மணித்துளிகளும் தன்னை உருக்கி ஒளிகொடுத்து உயிரை 26.09.1987 சனிக்கிழமை காலை 10.58 மணிக்கு அவன் உயிர் எமது மக்களுக்காக நின்று போனது. அவன் நம்பிக்கையோடு கண்களை மூடினான். நேற்றுப்போல் இருக்கின்றது அவனை நாம் விடைகொடுத்தது. ஆனால், 32 ஆண்டுகள் தியாக தீபம் லெப்.கேணல் என்னும் உயர்நிலை அன்று அவனுக்கு வழங்கப்பட்டது.
சாத்வீகப்போராட்டத்திலும், அகிம்சை வழியிலும் தமிழீழ மக்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை தியாகதீபம் திலீபனும், தமிழீழத்தாயவள் அன்னை பூபதி அம்மாவும் சாதித்துக்காட்டினார்கள்.
எதிர்வரும் 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான ஆர்ஜொந்தேயில் அமைக்கப்பட்ட அவரது நினைவுக்கல்லின் முன்பாக லெப்.கேணல். திலீபனின் 32 ஆண்டு நினைவேந்தலும், எமது தேசவிடுதலையின் மூத்தபோராளி,தேசியத்தலைவரின் பேரன்புக்குரிய கேணல் சங்கர் அவர்களின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தலும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்வோம். எங்கள் கடமையை செய்வோம். திலீபன் விரும்பிய மக்கள் எழுச்சியே விடுதலைக்கான பாதைகளைத் திறக்கும்.
- அரவிந்தன்.