முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமை காரணமாக அவ்விடத்திற்கு சென்ற சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டமையைக கண்டித்து முல்லைத்தீவு உள்ளிட்ட வடமாகாணம் முழுவதும் சட்டப் பணிகள் முடக்கம். வெள்ளிக்கிழமை வரை போராட்டம் தொடரவுள்ளது.
நீதிமன்றங்களின் வளாக முன்றிலில் ஒன்று கூடிய சட்டத்தரணிகள் நேற்று திங்கட்கிழமை (23) முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு சட்டத்தரணிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதன்போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்
வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் இன்று முல்லைத்தீவு நீதிமன்றின் முன்பாக ஒன்று கூடினோம்.
நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டோம். இந்த சந்தர்பத்தில் நீதிமன்றத்தின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்பட்டதற்கு இன்று தங்கள் நீதியினை கோரி திரண்ட மக்களுக்கு சட்டத்தரணிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்களுக்கு தோழோடு தோழ் நின்று பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்ட கிழக்கு மாகாண சேர்ந்த சங்க சட்டத்தரணி நண்பர்கள் நண்பிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இன்றையதினம் வடக்கினை சேர்ந்த சட்டத்தரணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்றுகூடி நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தீர்மானங்கள் எடுத்துள்ளோம்.
தென்னிலங்கையில் இருந்து வெளிவருகின்ற ஆங்கில சிங்கள நாளிதழ்களில் நேற்று நடைபெற்ற சம்பவம் திரிவு படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது எனவே அது தொடர்பான தெளிவான அறிக்கை வெளியிடுவது.
நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வது.மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வது எமது தாய்ச்சங்கத்திற்கு இங்கு நடைபெற்ற விடையங்கள் தொடர்பில் எடுத்துக்கூறுவது.
குறிப்பாக நேற்று நடைபெற்ற வழக்கு தொடர்பாக இடம்பெற்ற சம்பவங்கள் குறிப்பிட்ட ஒரு பௌத்த மதகுரு வழக்கு தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே வெளியில் நின்று நீதிமன்றம் எந்த தீர்ப்பினை தந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை தாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம் என்று நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாக செய்தியினை சொல்லியுள்ளார்.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பபது நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் மூன்று நாட்களுக்குள் எழுத்துமூலமான வாக்குறுதி ஒன்றினை வழங்கவேண்டும் இதனை கருத்தில் கொண்டு சட்டத்தரணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
காலை 9.30 தொடக்கம் 10.30 மணிவரை சட்டத்தரணிகள் தங்களை சேர்ந்த நீதிமன்றங்களுக்கு முன்னால் ஒரு அடையாள எதிர்ப்பினை தெரிவிப்பார்கள் இந்த நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கியமான நோக்கம் என்னவென்றால்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது,நீதிமன்ற அவமதிப்பு நடைபெற்றிருக்கின்றது.
நீதிமன்ற உத்தரவின் பெயரில் சென்ற சட்டத்தரணிகள் தாக்கப்பட்டுள்ளார்கள் இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலத்தில் எங்கேயும் இடம்பெறக்கூடாது என்பதை சட்டத்தரணிகள் அனைவரும் எடுத்துரைத்தார்கள் இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் இருந்து வெளியுலகத்திற்கு கொண்டுவந்த அனைத்து ஊடகங்களுக்கும் சட்டத்தரணிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.