யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது சிறிலங்கா விமானப்படையின் புக்காரா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) முற்பகல் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வித்தியாலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் ஞாபகார்த்த நினைவுத் தூபியடியில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் இறைவணக்கம், மெளன அஞ்சலியுடன் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட நண்பகல் 12 மணியளவில் நினைவுத் தூபியடிக்கு முன்பாக ஈகச் சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றது.
குறித்த துயரச் சம்பவம் இடம்பெற்றபோது பாடசாலையின் அதிபராக இருந்த சி.மகேந்திரம் முதலாவது ஈகச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள் ஈகச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மேற்படி குண்டு வீச்சுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளின் உயிர்களையும் பறிகொடுத்த எஸ்.சுந்தரலிங்கம் மாணவர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர் அ.சா.அரியகுமார், பருத்தித்துறைப் பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார், பருத்தித்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சி.திரவியராசா, முன்னாள் அதிபர் சி.மகேந்திரம், மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்ற சமகாலத்தில் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய சி.குருகுலசிங்கம், இ.சிவசங்கர், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மேற்படி பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், கிராம மக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மாணவர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு மலர்மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினார்கள்.
ஸ்ரீலஸ்ரீ வி.செவ்வந்திநாதக் குருக்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நினைவஞ்சலி உரைகளும், குண்டுவீச்சில் கொல்லப்பட்ட மாணவ, மாணவிகள் நினைவாக பாடல், கவிதை உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நினைவேந்த நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர்.
சந்திரிகாவின் ஆட்சிக் காலப்பகுதியில் 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப் படையின் புக்காரா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.