இந்தியை திணித்தால் மீண்டும் ஒரு மொழிப்போரை தொடங்குவோம் – வ.கௌதமன் எச்சரிக்கை!

0
317

அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள பிறமொழிகள் அனைத்தையும் புறக்கணித்து இந்தி மொழி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசியிருப்பது இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சி! மொழிவழி மாநிலம் என்ற சட்ட ஒற்றுமையை காலால் மிதித்து அவமதிக்கும் படுபாதக செயல்!

இந்தியாவின் அடையாளத்தை உலகெங்கும் தெரிவிப்பதற்கு இந்தியால் மட்டுமே முடியும் என்று நாகூசாமல் பேசும் அமித்ஷா அவர்களுக்கு உலகெங்கும் அதிகம் பேசும் மொழி எதுவென்று தெரியுமா? அப்படி பார்த்தால் முதலில் ஆங்கிலம், இரண்டாவது தமிழையுந்தான் இந்திய ஒன்றியத்தின் அடையாளத்தை தெரிவிப்பதற்கு பரிசீலிக்க முடியும். ஏனென்றால் உலகெங்கும் வாழும் மக்கள் கணிசமாக பேசுகிற மொழி தமிழும் ஆங்கிலமும்தான். இவை ஒரு புறம் இருக்கட்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் இந்த இந்திக் கருத்துகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரண்பாடானவை! இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்புஎண் – 343, இந்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் மொழியாக இந்தியையும், அடுத்த நிலையில் ஆங்கிலத்தையும் கூறுகிறது. ஆனால் இந்திமொழியை ”தேசிய மொழி” என இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.

ஒரே நாடு, ஒரே மொழி என்று அனைத்தையும் ஒற்றைத்தன்மையாக மாற்றி இறுதியில் சமற்கிருதத்தை முதன்மைப்படுத்துவதற்கு முதற்கட்டமாக இந்தியை முன்னிறுத்தவே இந்துத்துவாவின் அடிப்படை நோக்கம் என்பது இப்போது அமித்ஷாவின் அவர்களின் பேச்சில் வெட்டவெளிச்சமாகிவிட்டது.

சமற்கிருத மொழிவாரம், இந்திமொழி பரப்பும் வாரம், பள்ளிக்கல்லூரிகள், அனைத்துப் பல்கலைக்கழகங்களில் இந்தியை முதன்மைப்பாடமாக வைக்க ஆணை! சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை இந்திகட்டாய பாடம், என பல்வேறு தளங்களில் இந்தியை கொண்டுவந்துவிட்டது பா.ஜ.க. அரசு. அதுமட்டுமா? வடமாநிலத்தவர் அன்றாடம் தமிழகத்தில் குடியேறுகின்றனர். கடைசி ஐந்து ஆண்டுகளில் இதுவரை ஒரு கோடியே பதினான்கு லட்சம் பேர் வலிந்து தமிழ்நாட்டிற்குள் குடியேற்றப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தமிழைக் கற்றுக்கொண்டு இங்கு வேலைக்கு வரவில்லை! மாறாக இந்தியோடு வருகிறார்கள்! ஆகவே வெளிமாநிலத்தவர் வழியாகவும் இந்தியை திணிக்க முயல்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இவர்களின் ஒரே நோக்கம் தமிழ் நாட்டில் தமிழர்களை சிறுபான்மையினர்களாக ஆக்க வேண்டுமென்பதே.

இந்தியா என்பது ஒரு நாடல்ல. அது பல்வேறு தேசிய இன அரசுகளின் ஒன்றியம். இந்தியன் என்ற ஒரு தனி தேசிய இனம் கிடையாது! ஆகவே இந்தியமொழி தேசியமொழி கிடையாது. இந்தி என்பது ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்றுதான் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை அப்படியே கசக்கி எறிந்து விட்டு, இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்ட நாளில் (14 செப்டம்பர் 1949), “இந்தி வாரம்” கடை பிடிக்கிறோம் என்று பா.ச.க. அரசு கொக்கரிப்பது சட்டத்திற்கு எதிரான ஒன்று!

நாம் இனியும் பொறுமை காக்கக் கூடாது, 1938-ல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டமும், 1965 இல் பெரும் நெருப்பாக மூண்ட மொழிப்போரும் மீண்டும் நம்மை எழுச்சியுற செய்யவேண்டும்! தாளமுத்து, நடராஜன், கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் அரங்கநாதன், விராலிமலை சண்முகம், சிவகங்கை இராசேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என 12-க்கும் மேற்பட்ட மொழிப்போர் ஈகிகள் தங்கள் தேகங்களை தீக்கிரையாக்கியும், நஞ்சுண்டும் தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க!! என்றே மடிந்தனர். நஞ்சுண்டும், துப்பாக்கிக் குண்டேந்தியும் இறந்தோர் பலர். திருப்பூர் குமாரப்பாளையத்தில் 600க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து ஒரே குழியில் குப்பைகளைபோல் கிடத்தி புதைக்கப்பட்டனர்.

உலகில் நடந்த தனது தாய் மொழிக்கான உரிமைப்போரில் தமிழர்கள் தந்த உயிர்கொடை வரலாற்றைப்போல் வேறு எந்த இனத்திலும் குறிப்புகள் இல்லை.

தமிழ்நாட்டைத் தவிர கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் தங்களது மொழிக்கு முன்னுரிமைக் கொடுக்கிறது. ஆனால் தமிழ்நாடு அ.இ.அ.தி.முக அரசு பா.ச.க.வின் கிளைக் கம்பெனியாக செயல்படுகிறது. அனைத்து எதிர்கட்சிகளும் அமித்ஷா அவர்களின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் அ.இ.அ.தி.மு.க அரசு இதுவரை ஒரு கண்டன அறிக்கைக்கூட தெரிவிக்கவில்லை.

தமிழக மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அடுத்த மொழிப்போருக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ளவேண்டும்! நம்மீது பா.ச.க. அரசு போர் தொடுக்க தயாராகிவிட்டது. நாம் மூன்றாம் மொழிப்போருக்கு ஆயத்தமாகவேண்டும்! இந்தியாவின் இந்தித் திணிப்பை எதிர்த்து மீண்டும் களம் காணவேண்டும்!

அதேபோல், 5, 8 – ஆம் வகுப்புகளுக்கு புதியக் கல்விக் கொள்கையில் அடிப்படையில் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது, நமது மாணவர்களை கல்வியிலிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தும் சூழ்ச்சியாகும். இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தமிழக அரசும் முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரமாட்டோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கடந்த 2019 பிப்ரவரி 22-ஆம் தேதி அறிவித்தார். தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பில் நாங்களும் அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களையும் அமைச்சர் திரு. அன்பழகன் அவர்களையும் நேரில் சந்தித்து இத்தேர்வின் அபாயங்களை நேரில் சந்தித்து விளக்கினோம். நிதானமாக பரிசீலிக்கிறோம் என்றார்கள். இப்போது மத்திய அரசின் ஆணைப்படி, நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செப்டம்பர் 13.09.2019 அன்று அதிகாரபூர்வமாக
அறிவித்திருக்கிறது.

என்ன பரிசீலனை நடந்தது? மக்களின் கருத்தினை கேட்டார்களா? பின்பு யாரை திருப்திப்படுத்த இந்த அறிவிப்பு? பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியின் முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள் இந்த பொதுத்தேர்வை ஆளுமையோடு எதிர்க்கிறார். ஆனால் தமிழக அரசு ஆதரிக்கிறதென்றால் இவர்கள் தமிழ் மக்களுக்கான ஆட்சியாளர்களா? இல்லை பா.ச.க.வின் எடுபிடிகளா?

ஏழைய எளிய மக்களின் ”தமிழ்ப்பிள்ளைகள் கல்வி என்ற வாசலை தொடவே கூடாது! கல்வி என்பதை நாங்கள் மட்டும்தான் கற்கவேண்டும் என்ற உயர் சாதியினரின் பங்களியாக தமிழக அரசு மாறியதின் நோக்கம் என்ன? தில்லி என்ன சொன்னாலும் அதை செய்யத்தான் நீங்களென்றால், ஓட்டுபோட்டு உங்களை பதவியில் உக்கார வைத்த மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் நல்பரிசு இதுதானா? இந்த 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு பொதுதேர்வு என்பது படித்துக்கொண்டிருக்கும் நம் வீட்டு பிள்ளைகளை தடுத்து நிறுத்தி வீட்டில் முடக்குவதற்கான உத்தி. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு என்ன நடந்ததோ அது இனி 5-ஆம் வகுப்புப் பிள்ளைக்கே நடக்கப் போகிறது. அதைத்தான் புதிய கல்விக் கொள்கை முடிவு செய்திருக்கிறது.

பா.ச.க. அரசு கொண்டுவரும் குலக் கல்வி திட்டம்தான் இந்த புதிய கல்விக் கொள்கை திட்டம். கல்வியை நாங்கள் மட்டும்தான் படிக்கவேண்டும் அதை நீங்கள் படிக்கக் கூடாது நீங்கள் உங்கள் குலத்தொழிலை மட்டும் பார்த்து எங்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் “ இதைத்தான் புதிய கல்விக்கொள்கை வழியாகவும், 5 , 8 – ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பதெல்லாம். இதற்கு தமிழக அரசு தமது மண், மக்களின் பிள்ளைகளை புதிய கல்விக் கொள்கை என்கிற பலிபீடத்தில் காவு கொடுக்க பார்க்கிறது.

ஆபத்தான இந்த புதிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு பக்கங்களும் இப்போது நம்மை கொலைசெய்யும் கருவியாக மாறிக் கொண்டு வருகிறது. சமற்கிருதம் – இந்தி, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இன்னும் அடுத்தடுத்த அபாயங்கள் நம்மை நெருங்கப்போகின்றன! நாம் விழித்தெழ வேண்டும்! பா.ச.க.வின் பலமுனை தாக்குதலுக்கும், இன அழிப்பு திட்டத்திற்கும் துணைபோகும் தமிழக அரசின் நயவஞ்சக செயலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் மக்கள் திரள் போராட்டங்களின் வாயிலாகவே மட்டுமே முறியடிக்க முடியும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும். அதற்கான முன்னெடுப்பிற்கு மன உறுதியோடு தயாராக வேண்டும்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here