இலங்கையில் ஏற்பட்டு வரும் புதிய அரசியல் சூழலை தமிழ்த் தரப்பினர் சரியாக பயன்படுத்த வேண்டும். நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு முறையான அதிகாரப் பகிர்வு அவசியமாகும். அதனை பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா பக்கதுணையாக இருக்கும் என இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்திருந்த நிலையில் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இச்சந்திப்பு ஆரம்பமாகியிருந்தது. இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தலைமையிலான அமெரிக்க தரப்பில் தெற்கு மற்றும் ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் அன்று சி மான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வடமாகாண முதலமைச்சர்சி.வி.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்,
அமெரிக்க இராஜங்க செயலாரை எனது தலைமையிலான குழுவினர் இன்றைய தினம்(நேற்று) சந்தித்திருந்தோம். அச்சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்தது. தற்கால பிரச்சினைகள், இறுதி அரசியல் தீர்வு, விசேடமாக, காணி விவகாரம், மீள்குடியேற்றம், காணமல் போனோர் விடயம், அரசியல் கைதிகள் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.
அவர்களது உதவிகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. இதனை ஒரு வெற்றிகரமான சந்திப்பாக கருதுகின்றோம் என்றார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவிக்கையில்,
தற்போதைய சூழ்நிலை நல்ல முறையிலே மாறிக்கொண்டு வரும்போது அதனை தமிழர் தரப்பாகிய எமக்குச் சாதமாக பயன்படுத்த வேண்டும் என இராஜங்க செயலாளர் வலியுறுத்தினார்.
அந்த அடிப்படையிலே பலவிதமான பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கினாலும் சூழ்நிலையின் தன்மையினைக் கருதி கொடுத்து எடுத்து எமது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் எமது பிரச்சினைகள் தொடர்பாக தாம் நன்றாக உணர்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த உணர்வுடனேயே அமெரிக்கா செயற்படுவதாகவும் அதனை நாம் மனதில் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனடிப்படையில் வெகுவிரைவில் அரசியல் ரீதியான மாற்றங்களையும் நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்வதற்கான ஏது நிலைகள் உருவாகும் எனக் கூறினார்.
முன்தாக எமது பிரச்சினைகள் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அமெரிக்க இராஜங்கச் செயலாளரிடத்தில் எடுத்தக் கூறினார். எமது பிரச்சினைகளை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அந்த அடிப்படையில் அவர் எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு பல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.