13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து உரிய தீர்வைப்பெற்றுத்தரவேண்டும் என்பது உட்பட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜோன் கெரியிடம் கையளித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜோன் கெரியை நேற்றையதினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருந்தது. இதன்போதே குறித்த ஆவணத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கையளித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து வெ ளியிடுகையில்,
இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் 13ஆவது திருத்தச்சட்டம், வடமாகாண சபை யின் தேவைககள் குறித்த ஆவணமொன்றை நான் கையளித்துள்ளேன்.
வட மாகாண சபை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலைமை தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ஆகவே 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழான சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டான அரசியல் ரீதியான தீர்வொன்றைப் பெற்றுத்தரவேண்டும் என்பதை குறித்த ஆவணத்தில் பிரதாமனாக கோரியுள்ளேன்.
அதேபோன்று வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு தேவைகள் காணப்படுகின்றன. அவை தொடர்பான விரிவான தகவல்கள் அந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய தருணத்தல் தேர்தல் மேடைகளில் வௌிப்படையாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தேன்.
அதாவது, எமது பிரச்சினைகளை அரசாங்கத்திடம் கூறுவோம். அதற்குரிய தீர்வுகள் கிடைக்காதவிடத்தில் சர்வதேசத்திடம் அவற்றை கூறி தீர்வைப் பெற்றுக்கோள்வோம் என்பதாகும். அதனடிப்படையிலேயே தான் குறித்த ஆவணத்தை தற்போது அமெரிக்க இராஜங்க செயலாளரிடம் வழங்கியுள்ளேன் என்றார்.