முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரின் முடிவல்ல: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

0
455

முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரின் முடிவல்ல, அதுவே ஆரம்பம் என்பதை மே 18 தமிழின அழிப்பு நாளில் நாம் பேரெழுச்சி கொண்டு அன்று நடைபெறும் மாபெரும் பேரணியில் எடுத்துரைப்போம்.
மே 18… எங்கள் தேசம் வலி சுமந்த நாள்… எங்கள் சொந்தங்கள் எண்ணிக்கை தெரியாதபடி கொத்துக் கொத்தாகக் கொலையுண்ட நாள்… சிங்கள இனவாதத்தின் கொடுங்கரங்கள் தமிழீழ மண்ணை தமிழரின் குருதியால் சிவக்க வைத்த நாள்… குண்டு வீச்சுக்கும், எறிகணைக்கும் பதுங்கிய குழிகளுக்குள் மண்மூடிப் புதைக்கப்பட்ட நாள்…
மே 18 மட்டுமல்ல… முள்ளிவாய்க்காலும் எங்கள் அவலத்தின் சாட்சிகளாக வரலாற்றில் பதிவாகிப்போயுள்ளது. ஆனாலும், ‘நாங்கள் வீழமாட்டோம்’ என்ற உறுதியுடன் மீண்டும் எழுந்து நிற்போம்… அதுதான் எங்கள் தேசப் புதல்வர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.
நாங்கள் அழமாட்டோம்… மீண்டும் எழ முடியாத கோழைகளே அழுது தம்மை ஆற்றிக்கொள்வார்கள்… அழுவது அல்ல… எழுவதே எங்கள் வரலாறு… புதைந்த குழியிலிருந்தும், எரிந்த சாம்பலிலிருந்தும்;, சிதறிய ஆழியிலிருந்தும் எங்கள் தேசியப் புதல்வர்கள் எழுந்து வருவார்கள்… எங்கள் தேசத்து மக்கள் உயிர்த்தெழுவார்கள்… ‘விழ விழ எழுவோம்…’ என்றே அவர்கள் வேதமாய் ஒலித்துச் சென்றுள்ளார்கள்.
நீங்களும், நாங்களும் ஒன்றாகக் கைகோர்த்து வீச்சாக எழும் நாளில் தமிழீழ மண்ணில் அவர்கள் எல்லாம் எழுந்து வருவார்கள்… வித்தாக வீழ்ந்தவர்கள் விதியை வெல்வார்கள்… இது சத்தியம்…
தம்மை உரமாக்கி எம்மைக் காத்தவர்கள் மீண்டும் வருவதற்கு நாம் எத்தனையோ பணிகள் செய்ய வேண்டும். ஒன்றாய்… பலவாகி… ஓரணியில் நின்று… எங்கள் தேசத்தின் மண் மீட்கும் போரில் நாம் பலம் பெற வேண்டும்…
எங்கள் தலைவர் காட்டிய பாதை இப்போதும் தெளிவாகத் தெரிகின்றது… முள்ளிவாய்க்கால் முடிவல்ல… அது இன்னொரு முகை வெடிப்பு ஆகின்… எதற்காக நாம் அழவேண்டும்…? இறப்பிற்குத்தான் துக்கம்… உயிர்ப்பிற்கு ஏது துக்கம்…?
மண்ணை மீட்கும் மறவர்களாக, போர்க் களத்தில் விட்ட பணிகளை நாம் தொடர்வோம்… வெற்றி நமதாகும் வரை உறக்கம் கழைவோம்…
துக்கம் கொள்ளவும், துயர் பகிரவும் இது சா வீடல்ல… சரித்திரம் படைக்கும் மாவீரம்…
நாங்கள் வீதிகள் தோறும் வெம்பி வெடித்தழுத காலத்தில்… எக்காளமிட்டு வெற்றி நகை புரிந்த சிங்கள தேசம்… இப்போது வெட்கி முகம் புதைத்து நிற்கின்றது… எங்கள் உறவுகளைக் காப்பாற்றுங்கள் என்று நாம் வடித்த கண்ணீரிலும் அதிகமாக, சிங்கள ஆட்சியாளர்கள் தம்மைக் காப்பாற்றும்படி உலகமெல்லாம் இரஞ்சி வலம் வருகின்றார்கள்.
நாம் தோற்றுப்போகவில்லை… முள்ளிவாய்க்கால் எங்கள் தோல்வியின் குறியீடல்ல… மே 18 நாம் அழுவதற்கான நாளல்ல…
அறைகூவல் விடுக்கும் நாள்…
சர்வதேச சமூகம் தமிழின அழிப்புக்கான அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்த வேண்டும் எனவும் , தமிழீழ மக்கள் தமது அரசியல் விருப்பங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஐநாவின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும். இதில் புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையோடு இப் பேரணியை நகரவைப்போம் .
தமிழினம் காலம் காலமாய் நசுக்கப்படுவதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருந்த போதிலும் மௌனமாக இருப்பது ஏன்? இனப்படுகொலை தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை இலங்கையின் தற்போதுள்ள ஆட்சி மாற்றத்தைக் காரணம் காட்டி தாமதித்தது நீதி மறுக்கப்பட்டதுக்கு சமனாகும். தாயக, தமிழக, புலத்து மக்களின் அயராத போராட்டத்தின் ஊடாகவே இன்று சர்வதேசம் கண்விழித்துள்ளது. தொடர்ந்தும் போராடுவோம். சர்வதேசம் அமைதியை கலைத்து ஒடுக்கப்படும் தமிழ் இனத்திற்கு விடிவைப் பெற்றுத்தரும்வரை போராடுவோம். இந்த உரிமைக்கோசத்தை மே 18 ஆம் திகதி ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிப்போம் சனத்திரளாய் வாருங்கள்.
அழிவுகளும் அடக்கு முறைகளும் தமிழ் இனத்திற்கு புதிதல்ல விழ விழ எழுவோம். முள்ளிவாய்க்கால் விடுதலைப்போரின் முடிவல்ல அதுவே ஆரம்பம் என்பதை எடுத்துரைப்போம் பேரணியாய் ஓரணியில் வாருங்கள். இப்பேரணியில் பிரான்சில் உள்ள பொது அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், உள்ளூர் சங்கங்கள் ,கோயில்கள் , பாடசாலைகள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.
மே 11 முதல் மே 17 வரை Place de la République யில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
சிறிலங்காவில் படுகொலை செய்யப்பட்ட எமது சகோதர சகோதிரிகளின் உறவினர் பிரான்சு நாட்டில் இருந்தால், படுகொலை செய்யப்பட்ட உங்கள் உறவுகளின் படங்களை நீங்கள் உங்களுடன் இந்த அமைதி ஊர்வலத்தில் எடுத்து, சர்வதேசத்திடம் அவர்களுக்கான நீதியை கேட்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குரிய அஞ்சலியை செலுத்துவோம்.
அதனை ஒழுங்கமைப்பதற்கு எம்முடன் கீழ் குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்றாய் எழுவோம்…!
காலம் : 18.05.2015
நேரம்: பேரணி ஆரம்பம் 14:00 மணிக்கு
இடம் : Place de la Chapelle Metro: La Chapelle- Gare de Nord ligne 2-4-5
RER: B-D Gare de Nord
நினைவு வணக்க நிகழ்வு
காலம் : 18.05.2015
நேரம்: 16h30 மணிக்கு
இடம் : Place de la République Metro : République ligne 5-8-9-11
: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
தொடர்பு இலக்கம்: 06 52 72 58 67- 06 60 67 59 71 – 06 59 99 46 08

18 Mai france final new copy (1) 18 Mai french

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here