தமிழின அழிப்பிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி- ஜெனீவாவிலுள்ள ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் இன்று 16.09.2019 திங்கட்கிழமை அணியெனத் திரண்டனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு முன்னதாக ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பூங்காவில் இருந்து ஐ.நா. வரையில் கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
முருகதாசன் திடலில் ஈகிகளின் திரு உருவப்படத்திற்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. திரு.கவிதரன் அவர்கள் தனது அறிவிப்பின் ஊடாக நிகழ்வுகளைக்கொண்டு சென்றார். பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி நடைபயணத்தில் சென்ற செயற்பாட்டாளர்கள், பெல்ஜியம் நாட்டில் இருந்து ஜெனிவாநோக்கி ஈருருளிப் பயணத்தில் சென்றவர்கள் அரங்கில் மதிப்பளிக்கப்பட்டனர். அவர்களின் உன்னதமான பணிகுறித்தும் தெரிவிக்கப்பட்டது. குறித்த செயற்பாட்டாளர்களின் சார்பில் பலரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலி, தமிழ் மொழிகளில் இளையோர்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். சிறப்புரைகள், உணர்ச்சிக்கவிதை, ஜெனிவா மாணவிகளின் எழுச்சி நடனம் இடம்பெற்றன. நிறைவாக இன்றைய நிகழ்வின் பிரகடனம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கவனயீர்ப்பு நிறைவுபெற்றது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)