தமிழர்கள் பயங்கரவாதிகள் இல்லை ~ விக்கி ஆவேசம் !

0
518

தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதமேந்தி போராட சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என்றும் இவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு கொண்டுசென்று கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும்.

மேலும் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் கண்காணிக்கும் வகையிலும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வடக்கு கிழக்கில் தனது அலுவலகங்களை திறக்க வேண்டும் என்றும் இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வின் மூலம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இலங்கை தீவில் ஒரு நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பக்கூடிய தீர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கருத்தை அறியும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளையும் சர்வதேச சமூகம், சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கோட்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும்.

தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எம்மிடையே எவரும் இல்லை. அரச பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களே எம்மிடையே உள்ளார்கள். எம் மக்களை மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் நபர்களுடன் முடிச்சுப் போடாதீர்கள்.

எமது இளைஞர்கள், யுவதிகள் மற்றோர் யாவரும் எமது விடுதலைக்காகப் போராடினார்கள். அரச பயங்கரவாதத்திற்கு ஈடுகொடுக்க ஆயுதம் ஏந்தியவர்களே எமது மக்கள். அவர்களுக்குப் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி அவர்களின் சுதந்திர வேட்கையைக் கொச்சைப்படுத்தியுள்ளன தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள்.

அவ்வாறு தொடர்ந்து செய்வதைத் தவிருங்கள் என்று அரசாங்கங்களுக்குக் கூறி வைக்கின்றேன். இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்த காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களே. இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து உண்மையை எமது சிங்களச் சகோதர சகோதரிகள் அறிந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here