தமிழின அழிப்பிற்கு இனிமேலும் தாமதிக்காது நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி- ஜெனீவாவிலுள்ள ஐ.நா . தலைமையகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் இன்று (16.09.2019) திங்கட்கிழமை அணியெனத் திரண்டு கவனயீர்ப்புப் பேரணியை நடத்தவுள்ளனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் வழமைபோன்று ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பூங்காவில் இருந்து ஐ.நா. தலைமையகம் முன்பாக முருகதாசன் திடல் வரையில் கண்டனப் பேரணியாக முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் ஜெனிவா நோக்கி விண்ணுந்துகள்,தொடருந்துகள்,பிரத்தியேக வாகனங்கள் என அனைத்து போக்குவரத்து மார்க்கங்கள் ஊடாகப் பயணித்துள்ளனர்.
முன்னதாக பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி புறப்பட்ட நடைபயணம். மற்றும் பெல்ஜியத்தில் இருந்து புறப்பட்ட ஈருருளிப் பயணம் என்பன நேற்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை முன்றிலை அடைந்துள்ளன.