இடிந்து விழுந்த சென்னை விமான நிலையக் கட்டுமானங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

0
168

New-Chennai-International-Airport-Terminal45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலையக் கட்டுமானங்களைக் கண்டித்தும், இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை: சென்னை விமான நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டுமானத்தின் மேற்கூரைகள் அன்றாடம் இடிந்து விழுவதும் ‘பொன்விழா’வை நோக்கி மேற்கூரை இடிந்து விழுந்துகிறது என்று ஊடகங்கள் ஏகடியம் செய்வதும் தொடர்கிற போதும் மத்திய அரசு இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த விமான நிலையத்தின் மேற்கூரைகளும் கட்டுமானப் பணிகளும் இடிந்து விழுந்து பயணிகள் படுகாயமடைவது என்பது தொடர் செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசும் விமானப் போக்குவரத்துத் துறையும் இதுபற்றி கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமலே இருக்கிறது. நேபாளத்தை புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தின் போதுகூட அந்நாட்டின் காத்மண்டு விமான நிலையம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை; அந்த விமான நிலையத்தை பயன்படுத்தியே இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

நேபாளத்து எல்லையில் இருக்கிற மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பாதிப்பு ஏற்பட்ட போதும் அதன் அருகே உள்ள பக்டோரா விமான நிலையம் பாதிப்புக்குள்ளானதாக செய்திகள் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கம் உட்பட எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமலேயே சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் இதுவரை 45 முறை இடிந்து விழுந்து இருக்கின்றன.. பயணிகளை படுகாயப்படுத்தி இருக்கிறது.. இத்தனை முறை பாதிப்பு ஏற்பட்டும் மத்திய அரசும் அதன் விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் கண்டும் காணாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் விமான நிலையமும் இப்படி மோசமாக கட்டப்பட்டதில்லை. நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களின் குஜராத் மாநிலத்தின் பூஜ் பிரதேசம் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி. நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடம்.

அங்கு கூட இப்படி ஒரு மோசமான நிகழ்வுகள் நடந்ததாக செய்திகள் இல்லை. ஆனால் சென்னை விமான நிலையம் மட்டும்தான் இத்தகைய மோசமான நிலையில் இருக்கிறது. இதுவரை 45 முறை இடிந்து விழுந்தும் கூட அதனை சீரமைக்க ஒரு நடவடிக்கை கூட மேற்கொள்ளப்படவில்லை. இந்த விமான நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்ட நிறுவனம் மீது ஒரு சிறு நடவடிக்கையும் இல்லை… ‘மேக் இன் இந்தியா’ என்ற பெயரில் சர்வதேச நாடுகளின் முதலீடுகளையெல்லாம் இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று தம்பட்டம் அடிக்கிற மத்திய அரசு, தென்னிந்தியாவின் முதன்மையான சென்னை விமான நிலையம் நாள்தோறும் இடிந்து விழுந்து கொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சனையில்தான் கேளா காதாக இருக்கும் மத்திய அரசு இதுபோன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கூட அக்கறையற்று இருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆகையால் சென்னை விமான நிலையத்தை உடனே சீரமைக்க வேண்டும்; சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் 45 முறை இடிந்து விழுவதற்கு காரணமாக இருந்த நிறுவனம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதுடன் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை விமான நிலையம் முன்பாக வரும் மே 11-ந் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்த இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here