தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கு!
” பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக தமிழியல் பட்டகர்களின் ஐந்தாவது மாபெரும் அறிவாய்தல் அரங்கு ”
15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.01 மணிக்கு கிறித்தே நகரில் நடைபெறவுள்ளது.
அகிம்சையின் குறியீட்டு நாடான சனநாயகம் பேசும் பாரதத்தின் முகமூடியை கிழிக்க அகிம்சைவழியில் தன் இன்னுயிரை ஈகம் செய்ய உண்ணா மறுப்புப்போராட்டத்தை தியாக தீீபம் தொடங்கிய நாள் செப்ரெம்பர் 15.
மூன்று தசாப்தங்கள் அல்ல முந்நூறு தசாப்தங்கள் சென்றாலும் உலகில் எவராலும் செய்ய முடியாத அற்புத தியாகத்தை திலீபன் செய்துள்ளார். இந்த பூமிப்பந்தில் இறுதித் தமிழன் இருக்கும் வரை மறக்க முடியாத தியாகம் இது.
வளர்ந்து வரும் எமது தலைமுறை இந்தத் தியாகத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழ்ச்சோலை தமிழியல் பட்டப்படிப்பின் பேராசிரியர்கள் , பட்டகர்கள் ஆண்டு தோறும் தியாகதீபம் திலீபன் பெயரிலான ஆய்வரங்கை நடாத்துகின்றனர். காலத்தின் தேவையான தலைப்புக்களில், ஆழமான தேடல்களையும் ஆய்வுகளையும் செய்து கட்டுரையாக்குவதோடு அவற்றை பிரெஞ்சு மொழியிலும் வெளியிட்டு வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த அறிவாய்தல் அரங்கானது எமது பல தமிழ் இளையோர்களுக்கு மட்டுமல்லாது பிரெஞ்சு மாணவர்களுக்கும், ஏனைய பல்லினக் கல்வியாளர்க்கும் தமிழர் பற்றிய தெளிவான செய்தியையும் ஆதாரபூர்வமாக எடுத்துச் சென்றிருக்கின்றது. காத்திரமான தூரநோக்குடனான இந்த அறிவாய்தல் அரங்கில் தமிழ்உணர்வு கொண்ட அனைவரும் பங்குகொண்டு அறிவமுதம் பருக வேண்டியதொன்றாகும்.
பல்லாயிரம் ஆண்டுகளாக கிளைத்து நிற்கும் தமிழ் மொழியும் அதன் கூறுகளையும் கல்வியியல் தளத்தில் ஆராய்வதன் மூலம் எமது இளந்தலைமுறையினரையும் எமது விடுதலைக்காக அணியஞ்செய்து கொள்ளலாம்.அதற்காக கல்விசார் உழைப்புகளை நாம் முதலீடு ஆக்கிக் கொள்ளல் வேண்டும்.அதற்காக உழைக்கும் இவ்வாறான கல்விசார் அமைப்புகளுக்கும் உறுதுணையாக இருத்தல் வேண்டும். நிகழ்வில் சந்திப்போம்.