யாழ். மாவட்டம் தற்பொழுது மது பாவனையில் முன்னணி வகிப்பதாகவும் ஆண்டுதோறும் இது பன்மடங்கு அதிகரித்து வருவதாகவும் அதேவேளை, போதைப் பொருள் பாவனையும் கணிசமான அளவு அதிகரித்து ள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது
குறிப்பாக, மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் மாணவ சமூகமே அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் குடா நாட்டில் அதிக குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலான மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பாடசாலைக்கு செல்லும் நேரங்களில் கூட இவ்வாறு மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவலையும் அச்சமும் வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்கள், மது மற்றும் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதனால் இளம் சமுதாயம் பாரிய சமூக சீரழிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டு ஒரு மில்லியன் லீற்றருக்கு மேற்பட்ட அளவு சாராயம் நுகரப்பட்ட போதும், அதன் அளவு 2013ஆம் ஆண்டு 2 மில்லியன் லீற்றரை தாண்டியதாக இருந்ததோடு, 2013அம் ஆண்டு பியர் பாவனை அளவு மட்டும் 4 மில்லியன் லீற்றர் அளவுக்கு மேற்பட்ட அளவில் இருந்தது. அதேநேரம் 2013ஆம் ஆண்டு கள்ளு 5.5 மில்லியன் லீற்றர் வரை நுகரப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் சாராயம், பியர், கள்ளு பாவனை என்பன எதிர்பாராத அளவு உயர்ந்திருப்பதாக கூறப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து இயல்பு நிலை திரும்பி, பின்னர் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத முன்னேற்றத்தில் ஒன்று, மாணவர் மத்தியில் பியர், சாராயம் உள்ளிட்ட மதுபாவனையும் போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து சென்றுள்ளமை என்று சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.