வேகமாக வந்த பேருந்து தடம் மாறியதில் வீதிக்கு அருகில் இருந்த வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்ற சம்பவம் நேற்றுக் காலை 6 மணியளவில் மானிப்பாய் வீதி குருசுமதவடிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
காரைநகரில் இருந்து காலை 5.30 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மானிப்பாய் வழியாக வந்த குறித்த பஸ் ஆனைக்கோட்டை குருசு மதவடி சந்திக்கு அருகில் தடம் மாறி அருகில் உள்ள வீட்டின் முன் மதிலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது.
காரைநகர் -– யாழ்ப்பாணம் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார் போக்குவரத்து பேருந்தே இவ்வாறு மதிலோடு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் இருபதிற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த போதிலும் எவரும் காயங்கள் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.