இன்று மே 3 ஆம் திகதி உலக ஊடக சுதந்திர தினமாகும். இன்றைய ஊடக சுதந்திர தினத்தில், ஊடகவியலாளர்களுக்கு அதிகரித்த உடல் ரீதியான பாதுகாப்பு, தணிக்கை மற்றும் செய்தி ஊடகங்கள் எதிர்நோக்கும் ஏனைய அழுத்தங்களை நீக்குதல் போன்றவற்றை உலக செய்தித் தாள்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் மற்றும் செய்தித்தாள் ஆசிரியர்களின் பேரவை ஆகியன வேண்டி நிற்கின்றன.
இவ்வாண்டிலே இதுவரை, பிரெஞ்சு சஞ்சிகை சார்ளி ஹெப்டே அலுவலகம் மீதான தாக்குதலில் 7 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 2014 இல் மாத்திரம் 61 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதைப் பொறுத்தவரை “நடந்ததெல்லாம் போதும் இந்த தொழிலை முன்னரை விட சிறப்பாக பாதுகாக்க, முன்னரை விட அதிகமாக ஏதாவது செய்யுங்கள் என்ற கோரிக்கையை எழுப்ப WAN — IFRA இன்றைய சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறது” என அதன் பொதுச் செயலாளர் லாறி கில்மான் கூறினார்.
சார்ளி ஹெப்டோ தாக்குதலானது, ஜனநாயக சமூகங்களில் கூட விமர்சனப் பாங்கான நோக்கங்கள், கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாயிருக்கின்றன என்பதை பலருக்கும் புரியவைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. துன்பமான முறையிலே இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் தினசரி நிகழ்வாக ஆகிவிட்டிருக்கிறது.
“ஆனால், இவ்வாறான திகிலூட்டும் சம்பவங்களால் ஊடகத்துறையை மௌனிக்கச் செய்ய முடியாது. செய்தித்தாள் அமைப்புகளின் பாதுகாப்பு முதலியவற்றை சீர்குலைக்க பல்வேறு தரப்புகளாலும் விடுக்கப்படும் எச்சரிக்கை சம்பவங்களை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இது எங்களுக்கு அக்கறையூட்டும் ஒரு விடயமாகும். அதிகாரத் தரப்பினரை பொறுப்புக்கூற செய்வதற்கென கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் மீதான அனைத்து வடிவங்களிலுமான தாக்குதல்களை கண்டனம் செய்வதற்கு முன்னெப்போதையும் விட இப்போது அதிக விமர்சனப் பாங்கான ஊடகத்துறை அத்தியாவசியமானதாகும் என்றும் லாறி கில்மான் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கொலை செய்தல், உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் சிறையிடுதல் முதலியவை, தலைப்புச் செய்திகளில் அதிகளவில் இடம்பிடித்து இத்துறை தொடர்பில் அதிர்ச்சியூட்டும் நினைவூட்டல்களாக இருக்கின்றன.
அதேவேளை, எல்லாவற்றையும் விட சூட்சுமமான மற்றும் கவனிக்காமல் விடப்படுகிற தணிக்கை வடிவங்கள் உலகளாவிய ரீதியில் ஊடக சுதந்திரத்தை அரித்து அழித்துக் கொண்டிருக்கின்றன. அநேகமான சந்தர்ப்பங்களில் இவை, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் மீது இதற்கு சமமான நாசகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இதேவேளை, உலகளாவிய ரீதியாக ஊடகத்துறையில் ஏற்படுகின்ற, பல நுணுக்கமான தலையீடுகளில் ஒன்றான நேரடியற்ற அரச தணிக்கை அல்லது ‘மென் தணிக்கையை கண்டனம் செய்யுமாறு, ஊடக நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முதலியோரை இந்த மே 3ஆம் திகதி உலக ஊடக சுதந்திர தினமன்று WAN — IFRA அழைக்கிறது
அரசினுடைய நிர்ப்பந்தங்கள் ஊடகங்களுக்கு எதிராக பயன்படுத்தப் படும்பொழுது, நடுநிலையற்ற செய்தி தருதலுக்கு வழிவகுப்பதோடு இத் துறைசார்ந்தவர்களிடையே திகில் கலாசாரத்தை உருவாக்கி அதன் விளைவாக சுயதணிக்கையாக உருமாற்றம் பெற வைக்கிறது.
WAN — IFRA ஏற்படுத்தியிருக்கும் புதிய இணையத்தளமானது, நியாயமற்ற உத்தியோகபூர்வ விளம்பர ஒதுக்கீடு, பக்க சார்பான பகிர்வுகள், கூலிகொடுத்து “செய்தி போடுதல்”; இலஞ்சம், ஊடகவியலாளருக் கும் ஆசிரியர்களுக்கும் கொடுப்பனவுகளை வழங்குதல், அனுமதிப் பத்திரங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், அதிகமான வரிவிதிப்புகள் மற்றும் கணக்காய்வு செயற்பாடுகள் போன்ற ஏனைய நிர்வாக ரீதியானவை போன்ற உலகளாவிய ரீதியாக சுதந்திர ஊடகங்களின் கழுத்தை நெரிக்கும் அழுத்தங்களை கண்டனம் செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளது.
எங்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும் அனைத்து வளங்களையும் ஊடகவியலாளர்களை கொலை செய்வதை தடுக்கவும், ஆபத்துக்குட்படக்கூடிய ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்தும் அதேவேளை, வேறு இடங்களிலிருந்து சுயாதீன ஊடகங்களுக்கு வரும் சவால்களையும் நாம் அலட்சியப் படுத்த முடியாது” என்றார். WAN — IFRAவின் செயலாளர் லாறி கில்மான் மேலும் கூறுகையில், இவற்றைக் கவனியாது விட்டால் எமது சகபாடிகள் ‘கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் பெயரால்’ தமது உயிர்களை பலி கொடுத்து மேற்கொண்ட பணிகளை அவை நாசமாக்கி விடும். சுதந்திர ஊடகங்களின் மீது மேற்கொள்ளப் படும் அனைத்து தாக்குதல்களும் விமர்சன ரீதியான செய்தி அளிப்பை மௌனிக்கச் செய்துவிடும் அவை எங்கெங்கிருந்து, எவ்வெப்பொழுது எழுந்தாலும் அவற்றை கண்டு கொள்வ தற்காக விழிப்பாக இருந்து அவற்றை கண்டனம் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.