சம்பவ தினம் செப்டம்பர் 5ஆம் திகதி காலை 8மணியளவில் அம்முகாமை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த மக்கள் அனைவரையும் பொதுமைதானத்திற்கு வருமாறு அழைத்தனர்.
அங்கே கொம்மாதுறை இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவத்தினருடன் மட்டக்களப்பு நகரில் இருந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளான கப்டன் முனாஸ், கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் வந்திருந்தனர். இவர்களுடன் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேரும் நிறுத்தப்பட்டிருந்தனர். இவர்களுடன் ஏறாவூரைச்சேர்ந்த 7 முஸ்லீம்களும் வந்திருந்தனர்.
வயது அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டவர்களில் இளைஞர்கள் 158பேர் தெரிவு செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும் 24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்த படுகொலை தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கி.பாலகிட்னர் தலைமையிலான ஆணைக்குழு நடத்திய விசாரணையின் போது பொதுமக்களின் சாட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுவதாவது…
“1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
கப்டன் முனாஸ் என்ற இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத் உட்பட்ட இராணுவ குழு ஒன்றே இவர்களை பேருந்துகளில் கடத்திச் சென்று படுகொலை செய்தது”.
இப்போது வரை சடலங்கள் எவையும் கைப்பற்றப்படவில்லை.