பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சிறி மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்த 24 ஆவது தேர்த்திருவிழா கடந்த 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. வழமை போன்று இம்முறையும் பிரான்சின் பல பகுதிகள் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்தும் தேர்த்திருவிழாவில் மக்கள் கலந்துகொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாகவும் இருந்தது. இதேவேளை, தமிழீழத் தேசியப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் புதல்வன் கோகுலன் அவர்களும் குறித்த தேர்ந்த்திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார். அவரை எமது ஊடகப்பிரிவு தொடர்புகொண்டு உரையாடியிருந்தது. அவரும் மகிழ்ச்சியோடு எம்முடன் உரையாடியிருந்தார். பிரான்சுக்கு இரண்டாவது தடவையாகத் தாம் வருகைதந்திருப்பதாகவும் புலம்பெயர் நாடுகளில் இவ்வாறான தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டமை இதுதான் முதல் தடவை என்று குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் இவ்வாறான கலாச்சார நிகழ்வுகளைப் பேணிவருகின்றமையையிட்டுத் தாம் பெருமைகொள்வதாகவும் தெரிவித்தார். அனைவரின் விருப்பத்திற்காகவும் பல பக்திகானங்களையும் பாடியிருந்தார். இளம் தலைமுறைகள் கலைகளை வளர்த்துக்கொள்ள முன்வரவேண்டும் எனவும் கேட்டிருந்தார். பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவினர் தாயக வெளியீடுகளை காட்சிப்படுத்தியிருந்தனர். எமது மக்களோடு வெள்ளையினத்தவர்களும் குறித்த வெளியீடுகளை வாங்கிச்சென்றதைக் காணமுடிந்தது. வர்த்தகர்களும் தமது பொருட்களை மலிவுவிலையில் விற்பனைசெய்திருந்தனர். பிரெஞ்சு காவல்துறையின் கடும் பாதுகாப்பு மற்றும் உதவிகளுக்கு மத்தியிலும் சில அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் எம்மிடம் தெரிவித்தனர். காவல்துறையினரும் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாவும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களுக்கு வேண்டிய உணவு, குளிர்பானங்கள், குடிநீர் போன்றவை ஆங்காங்கே வழங்கப்பட்டதையும் காணமுடிந்தது. (எரிமலைக்காக பாரிசில் இருந்து கங்கைவேந்தன் – படங்கள் – யூட்)
Home
சிறப்பு செய்திகள் பிரான்சு பாரிஸ் மாணிக்கவிநாயகர் தேர்த்திருவிழாவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கூட்டம்!