இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராகத் தென் ஆபிரிக்காவில் போர்க்குற்ற செயல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ ஜெனரல் ஸ்ரீலால் வீரசூரியவுக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்க வாழ் தமிழ் அமைப்பு ஒன்று இதனை மேற்கொண்டுள்ளது. கிறிஸ்தவ மத விவகார நிகழ்வு ஒன்றிற்காக இராணுவ ஜெனரலும் அவரது துணைவியும் தென் ஆபிரிக்கா விஜயம் செய்துள்ளனர். 1990களில் இராணுவத்தில் கடமையாற்றிய போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ ஜெனரலை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இராணுவ ஜெனரலின் இந்த விஜயமானது குறித்த கிறிஸ்தவ மாநாட்டின் நன்மதிப்பிற்கு இழுக்கு ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகத் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.