பிரான்சிலுள்ள முன்னனி விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாக இருந்து வரும் தமிழர் விளையாட்டுக்கழகம் 93 ஆண்டுதோறும் பிரான்சு தேசத்திலும் ஐரோப்பிய ரீதியிலும் நடைபெறுகின்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருவதோடு தனது 93 பிரதேசத்திற்கும், பிரான்சு வாழ் தமிழ்மக்களுக்கும் பெருமைகளை பெற்றுக் கொடுத்து வரும் கழகமாக இருந்து வருவதோடு , தாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கும் உதவும் முகமாக வருடம்தோறும் “ அமுதவேளை ’’ என்ற கலைநிகழ்வையும் நடாத்தி உதவியும் வருகின்றனர்.
வளர்ந்து வரும் வீரர்களையும், கலைஞர்களையும் பெற்றோர்களையும் ஊக்குவித்து உற்சாகமளிக்கும் வகையிலும், விளையாட்டுக்களில் பெற்ற வெற்றிகளை பகிர்ந்து கொண்டு கொண்டாடும் வகையில், வருடத்தில் கோடைகால விருந்தோம்பலினை செய்தும் வருகின்றனர்.
கடந்த 24.08.2019 சனிக்கிழமை 93 மாவட்டத்தில் ஒன்றான செவரோன் நகரத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் பகல் 12.30 மணிக்கு கழகத்தின் வீரர்கள், கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆர்வலர்கள் எல்லோரும் கலந்து கொண்டதுடன் மதியபோசனத்துடன் வெற்றி பெற்ற வீரர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் கழகத்துக்கு பெற்றுக் கொடுத்த பெருமையையும் கூறி மதிப்பளித்து வைக்கப்பட்டனர். பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த போட்டிகளிலும், 2019ம் ஆண்டு சுவிசு நாட்டில் நடைபெற்ற தமிழீழ கிண்ணத்திற்கான போட்டியில் வெற்றிபெற்று அக்கிண்ணத்தை இரண்டாவது தடவையாக தமதாக்கிக் கொண்டதையும், 15 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்டப் போட்டியிலும் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டதையும் அதில் பங்கு கொண்டு வெற்றியை பெற்றுத்தந்த 93 விளையாட்டுக்கழக வீரர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான மதிப்பளித்தலில் 93 கழகத்தின் தலைவர் திரு. யோகச்சந்திரன், மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள், ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரும் முன்னைநாள் 93 விளையாட்டுக்கழக தலைவரும், ஆலோசகருமாகிய திரு. கிருபா அவர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. கிருபா ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு. சுதர்சன், மனித நேயச்செயற்பாட்டாளர் திரு. சுரேசு, பரப்புரைப் பொறுப்பாளர் போன்றோர் கலந்து கொண்டதோடு காலத்தின் தேவையான பல கருத்துக்களையும், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகளையும் கூறியதோடு இக்கழகத்தின் கண்ணாக இருந்து பல சோதனைகளுக்கு, வேதனைகளுக்கும், கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கழகத்தை தொடர்ந்து வளர்தெடுத்துச் செல்லும் திருமதி. கோமளா திலீப்குமார் அவர்கள் எல்லோராலும் பாராட்டப்பட்டார். இந்நிகழ்வானது இன்றைய காலத்தில் அவசியமானது என்றும் உயர்தரமான தொழில்நுட்பத்திலும், இயந்திரமயமான வாழ்விலும் எமது வளர்ந்து வரும் தமிழ் சந்ததியினர் மனிதநேயத்தோடும், மண், இன, மொழிப்பற்றோடும், சிறந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு என்று கூறியதோடு எதிர்வரும் 14.09.2019 சனிக்கிழமை நடைபெறவுள்ள “அமுதவேளை 2019’’ நிகழ்வுக்கு அனைவருடைய பங்களிப்பையும் செய்யும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
93 விளையாட்டுக்கழகத்தை சேர்ந்தவர்கள் கோடைகாலம் என்பதால், தாய்நாட்டிற்கும் ஏனைய இடங்களுக்கும் சென்றிருந்தாலும் இருக்கும் பலர் குடும்பங்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். நிகழ்வில் அனைவரும் சந்தோசமாகவும், உற்சாகமாகக் கலந்து கொண்டதையும், இவ்வாறான நிகழ்வுகள் இக்காலகட்டத்தில் மிகவும் ஆரோக்கியமானதாகவும் தேவையான தொன்றாகும் என்பதோடு, இவ் நிகழ்வில் சிறப்பாக பாராட்டப்பட வேண்டிய விடயமாக 2019 ல் தமிழர் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்ட மாவீரர் வெற்றிக்கிண்ணத்தை 93 விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகாலம் முதல் இன்று வரை விளையாட்டு வீரராகவும், குடும்பத்தலைவியாகவும் இருந்து வரும் வீராங்கனையிடமிருந்து, இந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிகளை கழகத்திற்கு தேடித்தந்த நான்கு வயது சிறுவனுக்கு ஒருவருக்கு வழங்கியமையும் அந்த கிண்ணத்தை அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு வெற்றிக்களிப்புடன் பெற்றுக்கொண்டு மைதான அரங்கின் ஒவ்வொரு படிகளிலும் தன்னந்தனியாக ஏந்திச் சென்றமை வரும் காலங்களில் ஒவ்வொரு வெற்றிப் படிகளையும் 93 தமிழர் விளையாட்டுக்கழகத்திற்கு இவர்கள் போன்றோர் பெற்றுக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. மற்றவர்களுக்கு முன்மாதிரியான இவர்களின் இச்செயற்பாடானது இன்னும் சிறப்படைய வேண்டும் இதனை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் காரணம் தமிழ்மக்கள் எங்களிடம் தற்போது மிஞ்சியிருப்பது மனித தர்மம் ஒன்று மட்டும் தான் அதனை எமது அடுத்த தலைமுறைக்கும் அனைவரும் அழகாக எடுத்துச் செல்ல வேண்டும்.
நன்றி.
( ஊடகப்பிரிவு-பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு )